தமிழகத்தில் முக்கிய மக்களவை தொகுதிகளை கைப்பற்ற பிள்ளையார் சுழி போட்ட பாஜக : வெடவெடத்துப்போன திராவிட கட்சிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2022, 12:54 pm

தமிழகத்தில், 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.க,வுக்கு கோவை, நாகர்கோவில், துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை என ஐந்து தொகுதிகளை வழங்கினர்.

ஐந்திலும் பா.ஜ.க, தோற்றது. ஆனால், 2021 சட்டசபை தேர்தலில், மொடக்குறிச்சி, நாகர்கோவில், திருநெல்வேலி, கோவை தெற்கு என நான்கு தொகுதியில் வென்றனர். தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு, ஒரு லோக்சபா எம்.பி., கூட இல்லை என்ற நிலையை, 2024ல் மாற்ற திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக கோவை, ஈரோடு, நாகர்கோவில், காஞ்சிபுரம், சென்னையில் ஒன்று, மதுரை பகுதியில் ஒன்று, திருச்சி மற்றும் சேலம் பகுதியில் ஒன்று என, எட்டு தொகுதியை கைப்பற்ற திட்டமிட்டு பணியை துவக்கி உள்ளனர்.

ஈரோடு லோக்சபா தொகுதிக்காக கடந்த, 19ல் மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தலைமையில் முதல் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. ஈரோடு தொகுதிக்குள் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகள் வருகின்றன.

கடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில், பா.ஜ.க, வென்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மிகக்குறைந்த ஓட்டில், பா.ஜ.க, முன்னாள் தலைவர் முருகன் தோற்றார். குமாரபாளையம், காங்கேயம் ஆகியவை, அ.தி.மு.க.,வுக்கு பலமுள்ள தொகுதிகள். ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கும் அ.தி.மு.க.,க்கு சாதகமானவை. எனவே, பா.ஜ.க, வெற்றியை உறுதி செய்யும்படி இனி மாதம் ஒரு கூட்டம், மக்கள் சந்திப்பு, மத்திய அரசின் திட்டங்கள் சென்றடைந்த பயனாளிகள் சந்திப்பு, மத்திய அரசின் திட்டங்களில் பயன் பெற விண்ணப்பித்தவர்களை அணுகுவது என பல வியூகங்களை வகுத்துள்ளனர்.

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மாற்று கட்சியினர், வி.ஐ.பி.,க்களை, பா.ஜக.,வுக்கு இழுப்பது, செயல்பாட்டாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது என்றும் முடிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் குறிப்பட்ட நபர்கள் தவிர, வேறு யாருக்கும் அனுமதி இல்லை. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பான தகவல் வெளியானதை தொடர்ந்து, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்ட திராவிட கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினரும் கலக்கத்தில் உள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!