கடவுள் எனக்கு ஒரு வரம் கொடுத்தால்… ஒரு சொட்டு மது கூட இருக்கக் கூடாது எனக் கேட்பேன் ; பிரச்சாரத்தில் ராமதாஸ் பேச்சு!!

Author: Babu Lakshmanan
25 March 2024, 12:00 pm
Quick Share

அதிக குடிசை வீடுகள் உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் என்றும், குடிசை இல்லாத வீடாக மாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மக்களவை தேர்தலுக்கான பரப்புரையை கோவடி கிராமத்தில் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் வேட்பாளர் முரளி சங்கர் அவர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது :- தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 10 தொகுதி பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, பிரச்சாரத்தை முதன் முதலாக கிராமத்திலிருந்து தான் தொடங்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை, அதன் காரணமாகத்தான் தாய் கிராமமான கோவடி கிராமத்தில் தொடங்குகிறேன். என்னுடைய முதலாவது பரப்புரையை எளிமையான முறையில் தற்போது தொடங்கி இருக்கிறேன்.

நேரு மூன்று முறை பிரதமராக இருந்தார். அவருடைய மகள் இந்திரா காந்தி மூன்று முறை பிரதமராக இருந்தார். இப்பொழுது, நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை பிரதமராக இருந்தார். மூன்றாவது முறையாக பிரதமராக போகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி இந்திய அளவில் 400 இடங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுவோம். அதில் பாட்டாளி மக்கள் கட்சியின் 10 வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் மற்றும் கூட்டணி சேர்ந்த அனைவரும் வெற்றி பெறுவார்கள்.

உங்களின் வறுமையை ஒழிக்க வேண்டும். மூன்று வேளை உணவு கிடைக்க வேண்டும். அதிக குடிசை வீடுகள் உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட்டம். குடிசை இல்லாத வீடாக மாற்ற வேண்டும். படித்தவர்களுக்கு வேலை உறுதி செய்யப்பட வேண்டும்.
அதேபோல் பெண்களுக்கு பாதுகாப்பு, பெண்கள் எல்லாம் கண்கள். தாயில்லாமல் நானில்லை. தனியாக ஒரு பெண் நகைகளை அணிந்து கொண்டு சுதந்திரமாக நடந்து செல்லும் போது தான் நாடு சுதந்திரம் அடைகிறது. ஆனால், தற்போது நடந்து சென்றால் காதோடு இருப்பதை அறுத்து சென்று விடுவார்கள். குடிப்பதற்கு தான் இதை செய்கிறார்கள்.

ஒரு சொட்டு சாராயம் இல்லாத நாடு வேண்டும். இந்த கூட்டணியின் கொள்கை பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். கல்வியில் பின் தங்கிய மாவட்ட விழுப்புரம் மாவட்டம், இதனை மாற்ற வேட்பாளர் முரளி சங்கருக்கு வாக்களியுங்கள். பல்வேறு கட்சிகளில் பரப்புரை ஆடம்பர மேடை அமைத்து பெரிய பொருள் செலவில் கோடிகணக்கில் செலவு செய்வார்கள். ஆனால் நான் தரையில் நாற்காலி போடு நான் வந்து வாக்கு கேட்கிறேன்.

வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது பெண்கள். முக்கனிகளில் முதல் கனி மாம்பழம். அதற்கு வாக்களியுங்கள். மும்மூர்த்தி கடவுள்கள் சிவன், விஷ்ணு, பிரம்மர் என்னிடம் வரம் வந்து கேட்டால் ஒரு சொட்டு மது சாராயம் கூட இந்த நாட்டில் இருக்கக் கூடாது என வரம் கேட்பேன். ஒரு சொட்டு நீர் கூட கடலில் கலக்கக்கூடாது எனவும் கடவுளிடம் வரம் கேட்பேன். இலவச கல்வி அதுதான் நமது கொள்கை, என பேசினார்.

இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜிகே மணி தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Views: - 303

0

0