கோவில் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள்…! மூடி மறைத்த கோவில் நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை…!! பக்தர்கள் அதிர்ச்சி…

Author: kavin kumar
21 January 2022, 2:28 pm

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கோவிலில் உள்ள பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள சித்தவநாயக்கன்பட்டி இக்கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காமாக்ஷியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி சிறப்பு பூஜைகளும், ஆண்டுக்கொருமுறை மாசிக்கொடை திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வதற்கும், சுவாமி தரிசனம் செய்வதற்கும் ஏராளமான பொதுமக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகின்றனர். அவ்வாறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் இக்கோவிலில் தங்குவதற்கு, குளிப்பதற்கு என கோவில் நிர்வாகம் சார்பில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி பௌர்ணமி தினத்தன்று கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து தரிசனம் செய்து கொள்வதற்காக ஏராளமானோர் இக்கோவிலுக்கு வந்திருந்தனர். அச்சமயத்தில் இக்கோவிலுக்கு வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் குளிப்பதற்காக வளாகத்தில் உள்ள குளியலறைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பெண் குளியலறையில் சம்பந்தமில்லாத கருப்புநிற வயர் இருப்பதைக்கண்டு, இது என்னவென்று எடுத்து பார்த்தபோது அது கேமிரா என தெரியவந்துள்ளது. இதனையடுத்து குளியலறையில் ரகசியக் கேமிரா இருப்பதைக்கண்ட அப்பெண் அதிர்ச்சியடைந்து கோவில் நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இது வெளியில் தெரிந்தால் கோவிலின் பெயர் கெட்டுவிடும் என்று கூறி விசாரிக்கலாம் என கூறியுள்ளனர் கோவில் நிர்வாகத்தினர்.

கோவிலின் குளியலறையில் இருந்த ரகசிய கேமிரா கண்டெடுப்பு குறித்து தகவல் கிடைத்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், இக்கோவிலுக்கு சென்று அங்குள்ள குளியலறையில் சோதனை செய்ததில் கூடுதலாக 2 ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது. மேலும் கேமராவுடன் சார்ஜர் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் விசாரணை செய்ததில் இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும், இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் கோவிலின் பெயர் கெட்டுவிடும் எனவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.

இக்கோவிலின் குளியலறையில் ரகசியமாக பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை பார்க்கும் போது இதன் மூலம் பெண்கள் குளிப்பதை பல மாதங்களாக தொடர்ந்து படம் எடுத்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இப்பிரச்சனை குறித்து அக்கோவில் நிர்வாகியிடம் கேட்டபோது, கோவில் நிர்வாகத்தில் சில பிரச்சினை இருப்பதாகவும், தங்களுக்கு பிடிக்காத சிலர் வேண்டுமென்றே கேமரா வைத்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும் கோவில் பூசாரி முருகன் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • hans zimmer composing music for ramayana movie starring sai pallavi சாய் பல்லவி படத்தில் இணைந்த கிரிஸ்டோஃபர் நோலன் பட இசையமைப்பாளர்? வெளியான மாஸ் வீடியோ!