காவல் நிலைய தடயங்களை அழிக்கவே ஆணையம் அமைக்கப்பட்டதா..? பல் பிடுங்கிய விவகாரம் ; சந்தேகத்தை கிளப்பும் பாதிக்கப்பட்ட தரப்பு!!

Author: Babu Lakshmanan
19 April 2023, 9:59 pm

நெல்லை ; அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையங்களில் உள்ள தடயங்களை அழிப்பதற்காகவே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுவதாக பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் மகராஜன் தெரிவித்துள்ளார்.

அம்பாசமுத்திரம் பல் எடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் காவல்துறையினரிடம் புகார் தரமான சுபாஷ் நேரில் ஆஜராகி தனது தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்தார். நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரான சுபாஷ் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி பொன் ரகு முன்பு ஆஜரானார்கள்.

தொடர்ந்து சுபாஷ் மற்றும் அவரது வழக்கறிஞர் மகராஜன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது :- டிஎஸ்பி முன்பு நடந்த விசாரணை திருப்திகரமாக இருந்தது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அடைய கருங்குளம் பகுதியைச் சேர்ந்த அருண் குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நாளை சென்னையில் விசாரணை நடத்துகிறது. ஆணையத்தின் முன்பு பாதிக்கப்பட்ட நபர்களான அருண், சந்தோஷ் ஆகியோர் ஆஜராகிகின்றனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். முதல் தகவல் அறிக்கையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் பலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஈடுபட்ட மற்ற காவல் துறையினரையும் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்க வேண்டும். முதல் தகவல் அறிக்கையில் கொலை முயற்சி என்ற பிரிவையும் கட்டாயம் சேர்த்திருக்க வேண்டும்.

அம்பாசமுத்திரம், விகேபுரம் போன்ற காவல் நிலையங்களிலும் இதே போன்ற சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களும் புகார்கள் அளித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததுடன் அவர்களுக்கான மருத்துவ சான்றிதழ்கள் ஆகியவையும் சாட்சியங்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் உள்ள ரத்தக் கறைகளை தடயவியல் நிபுணர்கள் மூலம் சேகரித்து அதன் அறிக்கையையும் சாட்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். சார் ஆட்சியர் விசாரணையை தொடங்கிய நாளிலேயே சம்பவம் நடைபெற்ற அனைத்து காவல் நிலையங்களையும் கட்டுப்பாட்டில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. காவல் நிலையங்களில் உள்ள தடையங்களை அழிப்பதற்காகவே ஆணையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு மருத்துவர், நீதித்துறை நடுவர் போன்றவர்கள் சரிவர செயல்படவில்லை. அவர்கள் மீதும் நிர்வாக ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும், என அவர் தெரிவித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!