கொளுத்தும் வெயிலில் பழுதான கார்…பொதுமக்களை தள்ள வைத்த அரசு அதிகாரிக்கு சிக்கல்: சமூக ஆர்வலர்கள் கண்டனம்..!!

Author: Rajesh
5 April 2022, 7:19 pm

ஸ்ரீபெரும்புதூரில் கலெக்டருடன் ஆய்வு பணிகளை மேற்கொண்ட பொறியாளரின் கார் பழுதானதால் காரில் அமர்ந்துக்கொண்டே கொளுத்தும் வெயிலில் பொதுமக்களை வைத்து காரை தள்ள வைத்த அதிகாரியால் சர்ச்சை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, அரசு பள்ளி வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்தல்,போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தத்தனூர், மேட்டுப்பாளையம், பால்நெல்லூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட கலெக்டர் உடன் ஆய்வு பணிகளை பார்வையிட வந்த மாவட்ட ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் சரவணன் பயணித்து வந்த கார் சாலை நடுவே பழுதாகி பால்நெல்லூர் பகுதியில் நின்றது.

பின்னர் அங்கிருந்த பொதுமக்களை அதிகாரி மற்றும் டிரைவர் ஆகியோர் அழைத்து காரை தள்ளும்படி கூறியுள்ளார். அதிகாரி கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப பொதுமக்கள் காரை தள்ளி விட்டு இயங்க வைத்தனர்.

ஆனால் கொளுத்தும் வெயிலில் பொதுமக்களை காரை தள்ள வைத்தது மட்டும் இல்லாமல் செயற்பொறியாளர் காரில் அமர்ந்து கொண்டிருந்தது காண்போரை முகம் சுளிக்க வைத்தது.

பொது மக்களின் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரி மனிதாபிமானம் இன்றி காரில் அமர்ந்தவாறு பொதுமக்களை தள்ளிவைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசு அதிகாரி இப்படி நடந்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த அரசு அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  • Actor Ajith admitted to Apollo Hospital அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?