விஜயபிரபாகரன் எனக்கும் மகன் மாதிரி தான்… அவர் நல்லா இருக்கனும் ; பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் சென்டிமென்ட் பேச்சு..!!

Author: Babu Lakshmanan
25 March 2024, 11:19 am

விஜயபிரபாகரன் எனக்கும் மகன் மாதிரி என்று சிவகாசியில் நடைபெற்ற பாஜக கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- விருதுநகர் தொகுதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை. மேலிடதிலிருந்து போட்டியிட கேட்டுக் கொண்டதால் இங்கு போட்டியிடுகிறேன். விருதுநகர் எங்களுக்கு புதிது அல்ல, அதிகமுறை இங்கு பிரச்சாரத்திற்கு வந்துள்ளோம். காமராஜருக்கு மணி மண்டபம் அமைத்துள்ளோம். இங்கு சொந்தபந்தம் அதிகம் பேர் உள்ளார்கள். விருதுநகர் போட்டியிடுவதில் சந்தோசம் அடைந்துள்ளேன்.

விருதுநகர் தொகுதி மக்களுக்காக நல்ல திட்டங்கள் செய்ய வாய்ப்புகள் உள்ளதால், நல்ல திட்டங்களை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளேன். எதிர் வேடப்பாளரான விருதுநகர் தொகுதியின் எம்பி மாணிக்கம் தாகூரின் செயல்பாடு குறைவாக இருந்ததாகவும், மக்களை பெரிதாக சந்திக்கவில்லை என கேள்விப்பட்டுள்ளேன்.

மறுமுனையில் போட்டியிடும் விஜயகாந்த மகன் விஜயபிரபாகரனை பொறுத்தவரை என் மகளுடன் படித்தவர். அவர் எனக்கும் மகன் மாதிரிதான். சின்ன பையன் அவர் நல்லா இருக்க வேண்டும். இது முக்கியமான பாராளுமன்ற தேர்தல், நாடு நமக்காக என்ன செய்கிறது என்பதை பார்க்க வேண்டும், பணம் கொடுப்பது என்பது இல்லாமல் மக்களுக்கான திட்டங்கள் உருவாக்க வேன்டும், மக்களுக்கான அடிப்படை தேவையை, வேலை வாய்ப்பு தொழில் வளத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.

விருதுநகரில் வெற்றி எளிமையாக கிடைக்கும் வகையில் கடுமையாக உழைத்து வைத்துள்ளார்கள். இன்னும் கொஞ்சம் உழைத்தால் நிச்சயம் பெரிய வெற்றி கிடைக்கும், என நம்பிக்கை தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிந்து காரில் செல்ல முயன்ற வேட்பாளர் ராதிகாவை தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சூழ்ந்து கொண்டதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  • Priyanka Deshpande cried Vijay TV Fame Shared கதறி அழுத பிரியங்கா தேஷ்பாண்டே… 2வது திருமணத்திற்கு பிறகு நடந்த சம்பவம்!