கரும்பு வெட்ட கொத்தடிமைகளாக வந்த 14 குழந்தைகள் மீட்பு : போலீசார் விசாரணை

Author: kavin kumar
18 February 2022, 2:12 pm

திருப்பூர் : வெள்ளகோவில் அருகே கர்நாடகாவில் இருந்து கரும்பு வெட்ட வந்திருந்த கொத்தடிமைத் தொழிலாளர்கள் 14 பேர் மற்றும் அவர்களுடன் வந்திருந்த குழந்தை தொழிலாளர்கள் 14 பேர் என மொத்தம் 28 பேர் மீட்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ளது செல்லப்பம்பாளையம். இப்பதியில் கரும்பு அதிகளவில் பயிரிடப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது கரும்பு வெட்டும் பருவம் என்பதால் கரும்பு வெட்டுவதற்காக வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு வந்துள்ளனர். கர்நாடகாவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் வந்திருந்த ஒரு தொழிலாளர் குழுவிடம் இன்று பெங்களூரைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கர்நாடகாவைச் சேர்ந்த காண்ட்ராக்டர் ஒருவர் உதவியுடன் கரும்பு வெட்டும் கூலியாக வந்திருந்த 28 பேரில் 14 பேர் கொத்தடிமை தொழிலாளர் என்றும், 14 பேர் குழந்தை தொழிலாளர் என்றும் தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சமூகநலத்துறை ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளர்கள் அனைவரும் ஷிமோகா மாவட்டம் பத்ராவதி பகுதியைசேர்ந்தவர்கள் என்றும், குழந்தைகள் அனைவரும் 4 வயது முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும், 12 குழந்தைகள் பெற்றோரை பிரிந்து வந்து வேலை செய்வதும் தெரியவந்துள்ளது. குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?