மாயமான +2 மாணவிகள் இருவர் மீட்பு…. பெற்றோருக்கு பாடம் கற்பித்த நட்பு : நெகிழ வைத்த சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan31 டிசம்பர் 2022, 1:08 மணி
வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி பகுதியில் காணாமல் போன இரண்டு பள்ளி மாணவிகள் 2-மாதங்களுக்கு பின் சென்னையில் மீட்பு – நட்பை துண்டிக்க சொன்னதால் இரு மாணவிகளும் எடுத்த முடிவின் விபரீதம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி காந்திபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சாமகோட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் ஆகிய இருவர்களும் தோழிகளாக பழகி வந்தனர்.
இவர்கள் பட்டிவீரன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் கடந்த அக்டோபர் 22-ம்தேதி டியூசன் செல்வதாக கூறிவிட்டு சென்றவர்களை காணவில்லை.
ஆனால் டீயூசனுக்கும் போகவில்லை. இருவரும் தீபாவளிக்கு எடுத்த புது துணியை மட்டும் எடுத்து பேக்கில் வைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் ஒரு மாணவி வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அந்த கடிதத்தில் அப்பா, அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். என்னை தேட வேண்டாம் என எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த மாணவியின் தாயார் முத்துலட்சுமி பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் ஆய்வாளர் சங்கரேஸ்வரன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவிகளை தேடி வந்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் முருகன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து மாணவிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் காணாமல் போன 2-மாணவிகளும் சென்னையில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து காவல்துறையினர் சென்னை சென்றனர்.
அங்கு பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்று இருவரையும் மீட்ட காவல்துறையினர் திண்டுக்கல் சமூகநல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் அவர்களை விசாரணை செய்ததில் பள்ளியில் படிக்கும்போதே இருவரின் பெற்றோரும் ஒருவருக்கொருவர் பேசக்கூடாது என கட்டுப்பாடு விதித்ததால் நட்பை தொடர இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினோம் என்ன தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாங்கள் அவரவர் பெற்றோருடன் செல்வதாக பட்டிவீரன்பட்டி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு சிறுமிகளை பத்திரமாக மீட்டுக் கொடுத்த காவல் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
0
0