ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை பணிகளை புறக்கணிக்கும் வருவாய் துறை ஊழியர்கள்… கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு எதிராக போராட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2023, 8:55 am
income - Updatenews360
Quick Share

ஆட்சியரை கண்டித்து வருவாய்த் துறை அலுவலர்கள் போராட்டம் : வாக்குவாதம் முற்றியதால் போலீசார் – அலுவலர்கள் இடையே தள்ளுமுள்ளு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் சிலர் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, வீடுகள் கட்டி வசித்து வந்ததாக, அந்த வீடுகளை இடிக்க வேண்டும் என, அந்த கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி செயலாளர் ஆகியோர் அந்த வீடுகளை இடித்து தரைமட்டமாக்க நடவடிக்கை எடுத்து, அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவர் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமாரிடம் ஆலோசித்து விட்டு, சம்மந்தப்பட்ட வாணாபுரம் வட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து, கடந்த 9ஆம் தேதி அந்த வீடுகளை இடித்துள்ளார்.

அந்த வீடுகள் அரசு புறம்போக்கு நிலத்திலும், பட்டா நிலத்திலும் இரண்டற கலந்திருந்த நிலையில், பட்டா நிலத்தில் இருந்த வீடுகளும் இடிக்கப்பட்டதால் அப்போது, பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அந்த வீடுகளை முன்நின்று இடித்த தனி வட்டாட்சியர் மனோஜ் முனியனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, தனி வட்டாட்சியர் மனோஜ் முனியனை பணியிடை நீக்கம் செய்த உத்தரவினை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தொடர்ந்து பலகட்ட போராட்டங்களை நடத்தியும் பயனில்லை.

இதையடுத்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இணைந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் இன்றைய தினம் ஈடுபடுவதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட 200-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வந்தனர்.

அப்போது, இவர்களை ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே நுழைய விடாமல் பேரிகாடுகள் அமைத்து, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பேரிகாடுகளை இழுத்துத் தள்ளி விட்டு உள்ளே நுழைய முயன்றதால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் போலீசார் எதிர்ப்பையும் மீறி, போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்து, தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அரை மணி நேரம் கழித்து, போராட்டக்காரர்கள் ஆட்சியர் அறைக்கு முன்பாக சென்று, அங்கு தரையில் அமர்ந்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அனைவரையும் இரவு கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் நள்ளிரவில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறையினர் 110 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைக் கண்டித்து இன்று 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வேலைகளை புறக்கணிக்கும் வருவாய்த் துறை ஊழியர்களின் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 269

0

0