படியில் தொங்கியபடி பயணிக்கும் மாணவிகள் : ஆபத்தான முறையிலான பயணத்திற்கு யார் பொறுப்பு..? கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா..?
Author: Babu Lakshmanan9 பிப்ரவரி 2023, 8:04 மணி
திருநெல்வேலியில் குறைவாக இயக்கப்படும் அரசு பேருந்துகளால், பள்ளி, கல்லூரி மாணவிகள் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், தொங்கியபடி பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாநகரில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்ல தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் அரசு பேருந்தில் பயணித்து வருகிறார்கள். ஆனால், சமீப நாட்களாக, பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாகவும், அவ்வாறு இயக்கப்படும் ஒரு சில பேருந்துகள் பேருந்து நிறுத்ததில் நிற்காமல் செல்வதாகவும், மாணவ, மாணவிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கட்டணமில்லா பேருந்து, சாதாரண கட்டண பேருந்துகள் சொர்ப அளவில் பள்ளி கல்லூரி நேரங்களில் விடப்படுகிறது. குறிப்பாக, நெல்லை – தென்காசி, நெல்லை – ஆலங்குளம், ராஜவல்லிபுரம், தாழையுத்து, தென்கலம், செழியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடையே இயக்கப்படும் பேருந்துகளும் போதிய அளவில் இயக்கப்படுவது இல்லை என்ற ஆதங்கமும் பயணிகள் மத்தியில் உள்ளது.
அதற்கு ஒரு உதாரணமாக, நெல்லை ராணி மேரிக் கல்லூரி மாணவிகள், வண்ணாரப்பேட்டையில் பல கிராமங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியர் உயிருக்கு ஆபத்தான நிலையில், படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்கின்றனர்.
பெண்களுக்கு பயணம் செய்ய கட்டணமில்லா பேருந்து, புதுமைப்பெண் திட்டம் என பெண்கள் பயன்பெறும் திட்டங்களை கொண்டு வந்த அரசு, பள்ளி, கல்லூரி மாணவிகள் மட்டும் பயணம் செய்ய கூடுதல் பேருந்து பள்ளி, கல்லூரி வேலைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என நெல்லை மாணவ, மாணவியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
0