வழக்கு விசாரணையை முடக்க பார்க்கிறார் செந்தில் பாலாஜி : அமலாக்கத்துறை போட்ட மனு.. உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2024, 4:38 pm
Senthil - Updatenews360
Quick Share

வழக்கு விசாரணையை முடக்க பார்க்கிறார் செந்தில் பாலாஜி : அமலாக்கத்துறை போட்ட மனு.. உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இதன்பின், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணைக்கு பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, இவ்வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். இதனைத்தொடர்ந்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் 3 முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால், ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தையும் நாடியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து இன்று 17வது முறையாக நீட்டிக்கப்பட்டது. இதனிடையே, போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை முடியு வரை அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று வந்த நிலையில், அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், வழக்கின் விசாரணையை முடக்கும் வகையில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.

குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க கோர முடியாது. செந்தில் பாலாஜியின் மனு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதைப் போன்றது.

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, போதுமான காரணங்கள் இல்லாமல் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

அமலாக்கத்துறையின் பதில் மனுவுக்கு பதிலளிக்க அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு அவகாசம் கோரியதை அடுத்து, இந்த வழக்கு விசாரணை ஜனவரி 31க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Views: - 358

0

0