அதிகரிக்கும் வன்கொடுமை வழக்குகள்.. தனிச் சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்… சி.வி.எம்.சி வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
13 April 2022, 6:16 pm
Quick Share

கோவை: கோவை, மதுரை உள்ளிட்ட வடமாவட்டங்களில் அதிகரிக்கும் வன்கொடுமைகளை தடுக்கவும், தேங்கியுள்ள வழக்குகளை விரைவாக விசாரிக்கவும், சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும் என குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கோரிக்கை வைத்துள்ளது.

பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்) 1989 தமிழகத்தில் அமலாக்கப்படுவதை கண்காணிப்பதற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு(CVMC) கடந்த 2019 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த அமைப்பினர் 2019-2020,21,22 ஆகிய ஆண்டுகளில் மாவட்டத்தின் செயல்பாடுகள் சட்டம் நடைமுறை ஆக்கம் உள்ளிட்டவைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை திரட்டியுள்ளனர். இந்த தகவல்களை இன்று கோவை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டனர்.

இந்த சந்திப்பின்போது அவ்வமைப்பின் மாவட்ட தலைவர் மு. ஆனந்தன் கூறியதாவது :- குடிமக்கள் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அமலாக்க செயல்பட்டு வருகிறது.

அந்த சட்டத்தின்படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் நிவாரணம் வழங்க வேண்டும். ஆனால் வழங்கப்படுவதில்லை. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழான கேள்விக்கு இதுகுறித்த எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கின்றனர். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் புனர் வாழ்விற்கு அக்கறை செலுத்தப் படுவதில்லை.

கோவை மாநகரில் பாதிக்கப்பட்டவர்கள் 2021 ஆம் ஆண்டு 29 லட்சத்து 49,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்தான் உரியவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மாவட்டத்தில் (புறநகர்ப் பகுதியில்) 67 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும். 12 லட்சத்து 70,000 ரூபாய்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குகளை விரைவாக விசாரித்து உரிய இழப்பீடுகள் கொடுக்க வன்கொடுமை நீதிமன்றத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும். கோவை மாவட்டம் தென் மாவட்டம் மற்றும் வட மாவட்டங்களில் நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்.

தற்போது கோவை மாவட்ட முதன்மை நீதி மன்றத்தின் விசாரணையில் கோவையில் 152 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல நீலகிரியில் 21 வழக்குகள் என மொத்தம் தமிழகம் முழுவதும் 5916 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதேபோல இந்த வழக்கு விசாரணைகளை 60 நாட்களுக்குள் முடிக்கவேண்டும். ஆனால் பல வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. கோவை மாநகரில் 9 வழக்குகளும், புறநகரில் 9 வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

அதேபோல வன்கொடுமை வழக்குகளை சட்டத்திற்குட்பட்டு எஸ் பி,டி எஸ் பி அந்தஸ்தில் உள்ளவர்கள் விசாரிக்க வேண்டும்.கொலை, பாலியல் பலாத்காரம் ஆகியவற்றிற்கு கொடுக்கும் முக்கியதுவம் வன்கொடுமை வழக்குகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. இதனால் புலன்விசாரணை தரம் குறைவாக உள்ளது. இதனால் உண்மை குற்றவாளிகள் தப்பிக்கின்றனர்.

கோவையில் கடந்த 1 வருடமாக வன்கொடுமை விழிப்புணர்வு கூட்டம் 2 முறை நடந்துள்ளது. நீலகிரியில் எந்த கூட்டம் நடைபெறவில்லை. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருகிறது. 2021-ல் மட்டும் பட்டியலின பழங்குடி சிறுமிகளின் போக்சோ வழக்கு 135 உள்ளது. போக்ஸோ வழக்கில் எஸ்.எடி பிரிவுகள் பதிவு செய்யப்படாததால் நிவாரணங்கள் சரிவர வழங்கப்படுவதில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 794

0

0