புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. தமிழக அரசுக்கு தோல்வி : இழப்பீடு தொகையை வழங்குக… ராமதாஸ் பரபர அறிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan6 டிசம்பர் 2023, 1:59 மணி
புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. தமிழக அரசுக்கு தோல்வி : இழப்பீடு தொகையை வழங்குக… ராமதாஸ் பரபர அறிக்கை!
வங்கக்கடலில் உருவாக மிக்ஜம் புயலால் சென்னையில் கடுமையான மழை பெய்தது இரு நாட்கள் மட்டும் தான். திசம்பர் மூன்றாம் தேதி பகலில் விட்டு, விட்டு பெய்த மழை, அன்று இரவு முதல் நான்காம் தேதி இரவு வரை இடைவிடாமல் மழை பெய்தது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் சென்னையின் சில பகுதிகளில் முதல் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 29 செ.மீயும், 48 மணி நேரத்தில் 49 செ.மீயும் மழை பெய்துள்ளது. இது ஒப்பீட்டளவில் அதிக மழை தான் என்றாலும் கூட, சமாளிக்க முடியாத மழை அல்ல. கடந்த காலங்களில் இதைவிட கூடுதலான மழை சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் பெய்திருக்கிறது. தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் பாதிப்புகளை தடுக்க முடியாது என்றாலும், குறைத்திருந்திருக்கலாம். ஆனால், திட்டமிட்டு செயல்பட தமிழக அரசு தவறிவிட்டது.
சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் நான்காம் தேதி முன்னிரவிலேயே மழை முற்றிலுமாக ஓய்ந்து விட்டது. அதன்பின்னர் மூன்று நாட்களாகிவிட்ட நிலையில், சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. எந்தெந்த பகுதிகளில் எல்லாம் கடந்த இரு ஆண்டுகளில் மழைநீர் வடிகால்கள் புதிதாக அமைக்கப்பட்டனவோ, அந்தப் பகுதிகளில் எல்லாம் கடந்த காலங்களை விட மிக அதிக அளவில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. அதற்கு காரணம் ரூ.4000 கோடி செலவில் மழை நீர் வடிகால்கள் எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டனவோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்பது தான் உண்மை.
சென்னையில் கோடம்பாக்கம், மாம்பலம், அசோக்நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழை – வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. தாம்பரம், முடிச்சூர், மணிமங்கலம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மழை பாதிப்புகளை இன்னும் முழுமையாக கணக்கிட முடியவில்லை. பல பகுதிகளை மீட்புக்குழுவினரால் இன்னும் நெருங்கக்கூட முடியவில்லை. மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசின் பல துறைகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பில்லை.
சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை – வெள்ளம் வடியாததால் 50% பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. பல பகுதிகளில் இன்னும் தொலைதொடர்பு இணைப்பு சீரமைக்கப் படவில்லை. மழை -வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் சிக்கிக் கொண்ட மூத்த குடிமக்கள் இதுவரை மீட்கப்படவில்லை. அத்தகைய சூழலில் உள்ள மக்கள் மரண வேதனையை அனுபவித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறையினரால் அமைக்கப்பட்ட மீட்புக் குழுக்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வாழும் பகுதிகளில் மழை நீரை வடியச் செய்வதிலும், மரங்களை அகற்றுவதிலும் மட்டும் தான் ஆர்வம் காட்டுகின்றனர்.
சாதாரண மக்கள் வாழும் பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெறவில்லை. சென்னையில் இரு நாட்களுக்கு பெய்த மழைக்கே இந்த அளவுக்கு பாதிப்பு என்றால், தொடர்மழை இன்னும் 24 மணி நேரம் நீடித்து இருந்தால், நிலைமை என்னவாகியிருக்கும்? என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.
மழை மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் கூறப் பட்டாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு கூடுதலாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. மழை பாதிப்புகள் குறித்த செய்திகள் மக்களைச் சென்றடைவதை தடுப்பதில் காட்டும் அக்கறையை, மழை நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதில் தமிழக அரசு காட்டவில்லை. நிவாரணப் பணிகள் சிறப்பாக நடைபெற்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதை விடுத்து, உண்மையாகவே நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி, மக்களின் துயரங்களைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பிற மாவட்டங்களில் இருந்து இன்னும் கூடுதலான பணியாளர்களை வரவழைக்க வேண்டும்; அதிக எண்ணிக்கையிலான இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை மேற்பார்வை பணிக்கு அனுப்ப வேண்டும். சென்னையில் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக இயல்பு நிலையை திரும்பச் செய்யத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
சென்னை மழை&வெள்ளத்தால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் அனைத்து குடும்பங்களும் பொருளாதார இழப்பையும், வாழ்வாதார இழப்பையும் சந்தித்துள்ளன. சென்னை மாநகர மக்களின் துயரங்களை ஓரளவாவது போக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் தலா ரூ.10,000 நிதி உதவி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
0
0