பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் : போக்சோவில் கைதான கல்லூரி மாணவன்..!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2022, 1:32 pm
Girl Sucide Lover Arrest - Updatenews360
Quick Share

பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் அண்டை வீட்டு டிப்ளமோ மாணவனை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் காட்டூர் விளாகம் வாழைக் கொள்ளை தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது கணவர் மூர்த்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மகேஸ்வரி தனது பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் தர்ஷினியுடன் இங்கு வசித்து வந்துள்ளார். மற்றொரு மகள் திருக்குவளையில் உள்ள மகேஸ்வரியின் தம்பி வீட்டில் படித்து வருகிறார்.

தர்ஷினி கார்ட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்திருக்கிறார். காலாண்டு விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் காட்டூர் விளாகம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் 19 வயதான தீனதயாளன் டிப்ளமோ முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். தீனதயாளன் குடும்பமும் தர்ஷனியின் குடும்பமும் நட்பு ரீதியில் பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் தீனதயாளனும் தர்ஷினியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய வந்ததால் இரு வீட்டிலும் அவர்களை கடுமையாக கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் தர்ஷினியின் தாய் மகேஸ்வரி காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தேங்காய் கடையில்  வேலை செய்து வருகிறார். அவர் வேலைக்காக சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது மாணவி தர்ஷினி புடவையில் தூக்கு மாட்டி இருந்துள்ளார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாயார் மகேஸ்வரி தீனதயாளன் தனது மகளை தாக்கியதாகவும் அவரது அம்மா தன் மகளைப் பற்றி ஊர் முழுவதும் தரகுறைவாக பேசியதாகவும் தன்னிடமே தனது மகளை பற்றி தரக்குறைவாக கூறியதாகவும் புகார் அளித்துள்ளார்.

மேலும் அந்த புகாரில் தீனதயாளன் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனால்தான் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து அனைத்து மகளிர் காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டியதாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் போக்சோ வழக்குப் பதிவு செய்து காதலன் தீனதயாளனை கைது செய்துள்ளனர்.

Views: - 524

0

0