குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்தி கோவைக்கு வந்தது: மக்கள் பார்வையிட கட்டுப்பாடு!!
Author: Udayachandran RadhaKrishnan28 January 2022, 9:28 pm
கோவை : சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கு பெற்ற அலங்கார ஊர்தி கோவைக்கு வந்தது. இந்த ஊர்தியை வ.உ.சி. மைதானத்தில் பொதுமக்கள் முதல் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து மறுக்கப்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் அலங்கார ஊர்தி, சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் என்றும், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 3 அலங்கார ஊர்திகளை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் 2-வது ஊர்தியில் மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், விடுதலை தியாகத்துக்கு வித்திட்ட தியாகி சுப்பிரமணிய சிவா, சுதந்திரப் போராட்டத்திற்காக போராடியவரும் சமூக சீர்திருத்தவாதியுமான சேலம் விஜயராக வாச்சாரி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையில் வடி வமைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஊர்தி கோவை வந்தது. அதன்படி பொதுமக்கள் பார்வைக்காக கோவை வ.உ.சி. மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் 31-ந்தேதி வரை காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த அலங்கார ஊர்தியினை பொதுமக்கள் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 வரை பார்வையிடலாம்.
தினசரி மாலை 5.00 மணி முதல் 6.30 வரை சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும், அலங்கார ஊர்தியினை காண வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
0
0