மாற்றுத்திறனாளி தம்பதியை முகநூல் மூலமாக ஏமாற்றிய முகம் அறியாத பெண் : வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை சுருட்டி மாயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2022, 10:04 pm
Disabled Couple -Updatenews360
Quick Share

தஞ்சை : கும்பகோணம் மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு ஏராளமானோர் வழங்கிய பண உதவிகளை முகநூலை சேர்ந்த பெண் ஒருவர் தமாற்றுத்திறனாளி தம்பதிகளை ஏமாற்றி நூதன முறையில் மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அடுத்த திருவிசநல்லூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதிகளான கௌரி, அண்ணாதுரை தம்பதிகள் கால்கள் செயல் இழந்தாலும் தங்களால் உழைக்க முடியும் என்ற நம்பிக்கையில் யாரிடமும் கையேந்தாமல் கீற்று ஓலைகளை முடைந்து தங்கள் வாழ்க்கையை சிரமத்துடன் நடத்தி வருகின்றனர்.

இதை பற்றி ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அவர்களுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து உதவிகள் குவிய தொடங்கின.

மேலும் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாற்றுத்திறனாளி தம்பதிகளை சந்தித்து அவர்கள் தற்போது வசிக்கும் பகுதியில் தமிழக அரசு சார்பில் 2 1/2 சென்ட் இடத்திற்கான இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். அதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து அவர்களுக்கு மாடுகள் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் பற்றிய வீடியோவை பேஸ்புக்கில் பார்த்த நிர்மலா தேவி என்ற பெண், மாற்றுத்திறனாளி தம்பதிகளை தொடர்பு கொண்டு தான் உங்களுக்கு உதவி செய்வதாக கூறி பேஸ்புக்கில் வலம் வரும் அவர்கள் வீடியோவிற்கு கீழ் தன்னுடைய வங்கி கணக்கை பதிவிட்டு மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு பண உதவி செய்ய நினைப்போர் இந்த வங்கி கணக்கில் பணம் செலுத்தினால் அவர்களிடம் கொண்டு சேர்க்கப்படும் என பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.

அதன்படி அந்த வங்கிக் கணக்கிற்கு ஏராளமானோர் பணம் செலுத்தி உள்ளனர். மாற்றுத்திறனாளி தம்பதிகளை நம்ப வைப்பதற்காக ஆரம்பத்தில் அவரது வங்கி கணக்கில் கிடைத்த பணத்தை கொண்டு அவர்களுக்கு உதவி செய்வது போல் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அவர்களுக்கு பொருட்களை வாங்கி அனுப்பி உள்ளார்.

அதனை நம்பிய மாற்றத்தினாளி தம்பதிகள் பண உதவி செய்ய வேண்டும் என தொடர்புகொள்வோரிடம் நிர்மலா தேவியின் தொடர்பு எண்ணை கொடுத்து அவரது வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர்.

இந்த நிலையில் வெறும் 1,000 மற்றும் 500 க்கு மட்டுமே பொருட்களை வாங்கி நிர்மலாதேவி அனுப்பியுள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக மாற்றுத்திறனாளி தம்பதியை தொடர்பு கொள்ளும் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் தெரிவித்து வங்கிக் கணக்கில் சராசரியாக ரூ.10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.

ஆனால் நிர்மலா தேவி பணத்தைக் கொண்டுவந்து கொடுக்காமல் சொற்ப அளவில் மட்டுமே பொருட்கள் வாங்கி அனுப்புவதால் சந்தேகம் அடைந்த மாற்றுத்திறனாளி தம்பதி அவரை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டுள்ளனர். அவர் நேரில் வந்து தருகிறேன் தருகிறேன் என கடந்த சில மாதங்களாக ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் நிர்மலா தேவியின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவர் யார் எங்கு இருக்கிறார் அவர் எப்படி இருப்பார் என தெரியாமலும், இதுகுறித்து யாரிடம் புகார் தெரிவிப்பது என புரியாமல் மாற்றுத்திறனாளி தம்பதிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளி தம்பதி கவுரி கூறும்போது, கடந்த ஆண்டு எங்களை பற்றிய வீடியோ, தொலைக்காட்சியில் வெளியானதை தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து மாடுகள் வழங்கியுள்ளனர்.

தமிழக அரசு சார்பில் தஞ்சை மாவட்ட கலெக்டர் இலவச வீட்டுமனை வழங்கியுள்ளார். எங்களுக்கு அந்த இடத்தில் ஒரு பெட்டிக் கடையில் ஒரு வீடும் அமைத்துக் கொடுத்தால் உதவியாக இருக்கும்.

நிர்மலா தேவி என்பவர் மூலம் எங்களுக்கு உதவி செய்பவர்கள் அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தி உள்ளனர். ஆனால் அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அவர் யார் எந்த ஊரில் இருக்கிறார் என்று எந்த விவரமும் எங்களுக்கு தெரியாது. அந்த பணத்தை மீட்டுக் கொடுத்தால் எங்களுக்கு வீடு கட்டுவதற்கு உதவியாக இருக்கும் என கூறினார்.

Views: - 507

0

0