விதை நெல் வாங்கி நடவு செய்த 20 நாட்களில் விளைந்தததால் அதிர்ச்சி.. போலி விதை நெல்.. ரூ.8 லட்சம் பறிகொடுத்த விவசாயி!

Author: Udayachandran RadhaKrishnan
3 January 2024, 2:13 pm
Fake
Quick Share

விதை நெல் வாங்கி நடவு செய்த 20 நாட்களில் விளைந்தததால் அதிர்ச்சி.. போலி விதை நெல்.. ரூ.8 லட்சம் பறிகொடுத்த விவசாயி!

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாளாடி அருகே உள்ள ஒத்தை வீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா இவர் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இந்த வருடம் விவசாயம் செய்வதற்கு அதே பகுதியில் உள்ள எட்டு ஏக்கர் விளைநிலத்தினை குத்தகைக்கு வாங்கி உள்ளார். அதில் நெல் பயிர் நடவு செய்ய சமயபுரம் பகுதியில் உள்ள கோல்டன் ஆக்ரோ சர்வீஸ் கடைக்கு சென்று தன்வீர் என்ற நெல் ரகத்தினை கேட்டுள்ளார்.

அதற்கு கடைக்காரர் நியூ அம்மன் விதை நெல் தன்னிடம் உள்ளதாகவும். நடவு செய்த 120 நாளில் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 40திலிருந்து 50 மூட்டை வரை மகசூல் கிடைக்கும் என கூறியுள்ளார்.

இதனை அடுத்து 180 கிலோ விதை நெல்லினை 17,100 ரூபாய்க்கு வாங்கி தனது வயலில் விதைத்துள்ளார். நாற்று நன்றாக வளர்ந்ததும் சரியாக 25 நாட்கள் கழித்து நாற்றுப்பறித்து நடவு செய்துள்ளார்.

நெற்பயிர் நடவு செய்து ஒரு மாதம் முடிவுறும் நிலையில் குறிப்பிட்ட கடையில் வாங்கிய நியூ அம்மன் நெல் ரகம் நடவு செய்த 20 முதல் 30 நாட்களிலேயே கதிர் (பூட்டை) வைக்க தொடங்கியுள்ளது.

இந்த நெல் ரகம் மூன்று மாத கால பயிர் என்பதால் 60 நாட்களுக்குப் பிறகு பயிரில் கதிர் வைத்தால் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கும் ஆனால் பயிர் நடவு செய்த 20 முதல் 30 நாட்களில் கதிர் வைத்ததால் விவசாயி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நடவு செய்த பயிர்கள் தெளிவடைந்து, வேரூன்றி, களை பறிப்பதற்குள்ளாகவே தற்பொழுது கதிர் வைத்துள்ளது. இந்த நெற்கதிர் பால் பிடித்து மகசூல் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை இதற்கு உரம் வைத்து தண்ணீர் பாய்த்து எவ்வளவு செலவு செய்தாலும் இந்த பூட்டை பால் பிடித்து கதிர் ஆகாமல் அப்படியே காய்ந்து விடும் நிலையில் உள்ளது.

இதனால் நெல்மணிகள் கிடைக்காமல் வெறும் கால்நடைகளுக்கான வைக்கப்புல் மட்டுமே கிடைக்கும். இதனையடுத்து விதைநெல் வாங்கிய குறிப்பிட்ட அக்ரோ சர்வீஸ் கடைக்குச் சென்று புகார் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர்கள் அந்த கம்பெனி சேர்ந்தவர்கள் உரத்தை தெளித்தால் பூட்டை உதிர்ந்து விடும் பின்னர் மீண்டும் பூட்டை பால் பிடித்து கதிர்கள் வந்து நெல் விளைச்சல் வரும் என கூறியுள்ளனர். இதனை அடுத்து 8,500 ரூபாய்க்கு உரத்தை வாங்கி தெளித்துள்ளனர்.

ஆனாலும் நெற்பயிர்கள் கதிர் பதர்கள் போன்றே இருந்ததால் மீண்டும் சமயபுரத்தில் விதை நெல் வாங்கிய கடையினை தொடர்பு கொண்டு கேட்டபோது நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது நாங்கள் திருச்சியில் இருந்து தான் விதைநெல் வாங்கி கொடுத்தோம் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வேளாண்மை துணை இயக்குனர், விதை ஆய்வாளருக்கு விவசாயி ராஜா புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் 8 ஏக்கரில் நெல் நடவு செய்த விவசாய நிலத்தை வேளாண் அதிகாரிகள் பார்த்துவிட்டு சென்றுள்ளனர்.

ஆனாலும் 8 ஏக்கருக்கு இரண்டு லட்சத்திற்கு மேல் செலவு செய்து வீணாகி விட்டதாக வேதனையுடன் வேலை பார்த்துக் கொண்டு விவசாயி ராஜா செய்வதறியாது நின்று இருந்தார்.

இதுகுறித்து விவசாயி ராஜா கூறிய போது, எட்டு ஏக்கரில் புதிய ரக நியூ அம்மன் விதை நெல்லை சமயபுரம் பகுதியில் உள்ள கம்பெனியில் வாங்கி தெளித்து 25 நாட்களுக்கு பின்னர் நடவு செய்தோம் 60 நாட்களுக்குப் பிறகு நெற்பயிரில் பூட்டை வைத்தால் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கும் ஆனால் பயிர் நடவு செய்த 20 முதல் 30 நாட்களிலே பூட்டை வைத்ததால் மகசூல் கிடைக்காது என்றும், 40 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறேன் இது போன்று தரம் இல்லாத விதை நெல்லை பார்த்தது இல்லை.

இதுபோன்ற போலியான விதை நெல்லை விற்பனை செய்த கடை உரிமையாளர் மற்றும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுவரை இரண்டு லட்சத்திற்கு மேல் செலவு செய்துள்ளதால் உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வகையான நெல் ரகங்களையும் வேளாண் துறையினர் விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாவட்டத்தில் 250 ஏக்கருக்கு மேலாக நெல் வாங்கி நடவு செய்து இதேபோன்று நிலை இருந்ததால் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 642

0

0