ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் காலில் விழுந்து கதறியழுத மூதாட்டி : வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றிச் சென்ற சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2023, 8:17 pm
Old lady - Updatenews360
Quick Share

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே கந்தனேரி பகுதியில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தினை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டி இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவர் வழக்கு தொடுத்தார்.

இதனையடுத்து கடந்த 6 மாதத்திற்க்கு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்து இருந்தனர்

ஆனால் 6 மாதம் கடந்தும் குடியிருப்புகளை காலி செய்யாமல் இருந்ததால், இன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி எந்திரத்தின் மூலம் அகற்ற முடிவு செய்து அவற்றை அகற்றி வந்தனர்.

அப்போது குடியிருப்பு வாசிகள் சிலர் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சிலர் தீ குளிப்பதாக கூறியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரையும் வழுகட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றி பள்ளிகொண்டா காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

பின்பு அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் பாதுகாப்போடு அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது. அப்போது ஒரு மூதாட்டி எனது மாட்டு கொட்டைகையாவது விட்டு விடுங்கள் எங்களுக்கு 5 மாடு இருக்கு அதனை எங்கு கொண்டு செல்வேன் உங்கள் காலில் கூட விழுகின்றேன் என அதிகாரிகளை கை எடுத்து கும்பிட்டு அழுதார்.

ஆனால் சற்றும் மனம் தளராத அதிகாரிகள் அவரை துரத்திவிட்டு ஆக்கிரமிப்பை அகற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Views: - 271

0

0