மண் சரிந்து கிணற்றுக்குள் பாய்ந்த டிராக்டர் : 21 வயதே ஆன இளம் விவசாயி பலியான சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2022, 8:54 pm
Well Tractor - Updatenews360
Quick Share

திருச்சி அருகே வயலில் உழுது கொண்டிருந்த டிராக்டர் மண் சரிவு ஏற்பட்டு அருகில் இருந்த கிணற்றில் விழுந்து இளம் விவசாயி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம்| சிறுகனூர் அருகே உள்ள ஊட்டத்தூர் ஊராட்சியினைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது மகன் சதீஷ் வயது (21). டிப்ளமோ படித்து விட்டு விவசாயம் செய்து வருகிறார்.

ஊருக்கு அருகே தனது வயலில் நெல் நடவு பணிக்காக சதீஷ் டிராக்டர் இயந்திரம் மூலம் வயலை உழுது கொண்டிருந்தார். அப்போது வயலில் உள்ள கிணறு அருகே டிராக்டர் சென்றபோது திடீரென மண் சரிவு ஏற்பட்டு 70 அடி ஆழமுள்ள கிணற்றில் டிராக்டர் சரிந்து உள்ளே விழுந்தது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் மற்றும் புள்ளம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிரேன் எந்திரத்தின் உதவியுடன் கிணற்று தண்ணீரில் மூழ்கிக் கிடந்த டிராக்டரை முன்னதாக மீட்டனர்.

இதனைத்தொடர்ந்து 40 அடி ஆழம் கொண்ட தண்ணீரில் தீயணைப்பு துறையை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வீரர்கள் சதீஷை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கிணற்றுக்கு அருகே திரண்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு துறையினர் கிணற்றுத் தண்ணீரில் இருந்து சதீஷை சடலமாக மீட்டனர்.

அவரது உடலை சிறுகனூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயலில் உழுது கொண்டிருந்த டிராக்டர் மண் சரிவு ஏற்பட்டு திடீரென அருகில் இருந்த கிணற்றில் விழுந்த சம்பவத்தில் வாலிபர் பலியான சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 424

0

0