ரேஷன் கடையில் கொடுக்கற பொருள் தரமே இல்ல : கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சரிடம் ஆவேசமாக கேள்வி கேட்ட பெண்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2022, 6:47 pm

காஞ்சிபுரம் : கிராம சபை கூட்டத்தில், செங்காடு நியாயவிலை கடைகளில் அரிசி மற்றும் பொருட்கள் தரமாக இல்லை என ஒரு பெண் ஆவேசமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காட்டில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது, ஊராட்சிகளின் செயல்பாடு, வளர்ச்சிப் பணிகள், ஊரகப் பகுதி மக்களின் குறைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.

ஆட்சி தொடங்கி ஒரு ஆண்டு ஆகப்போகிறது. ஆட்சி எப்படி உள்ளது என பொதுமக்களிடம் கேள்வி கேட்டார் முதலமைச்சர். கடந்த 10 வருடங்களாக கிராம சபை கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்ற முதலமைச்சர், ஆண்கள் யாரும் பேசக்கூடாது பெண்களிடம் தான் கேள்வி கேட்பேன் என்றார்.

செங்காடு பகுதியில் பலர் கிட்னி செயலிழந்தது பற்றி பொதுமக்கள் முதல்வரிடம் கூறினர். இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, செங்காடு நியாயவிலை கடைகளில் அரிசி மற்றும் பொருட்கள் தரமாக இல்லை என ஒரு பெண் ஆவேசமாக முதல்வரிடம் கேள்வி எழுப்பினார். யாரிடம் வேண்டுமானாலும் கூறுங்கள் என நியாய விலை கடை ஊழியர்கள் பேசுவதாக கூறியதாக ஒரு பெண் ஆவேசமாக தெரிவித்ததால், நியாயவிலை கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது எனக்கு பெருமையாக உள்ளது. ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், ஊராட்சிகளில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி தன்னிறைவு அடைய வேண்டும்.

ஜாதி மத பேதங்களை அனைவரும் ஒற்றுமையுடன் ஒருமித்த மனத்துடன் வாழ வேண்டும் தந்தை பெரியார் பெயரில் பெரியார் சமத்துவபுரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போல கிராம செயலகம் உருவாக்கப்பட உள்ளது.

திராவிட மாடல் ஆட்சியை உலகத்திற்கு உணர்த்த உள்ளோம். இந்த கிராமத்தில் 12 லட்சம் ரூபாய் மதப்பீட்டில் மதுரை வீரன் கோவில் குளம் சீரமைக்கப்படும்’ என்று கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!