கோவை மாநகராட்சி அதிகாரிக்கு ரூ.10 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் : வார இதழ் ஆசிரியர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2023, 6:51 pm
Cbe - Updatenews360
Quick Share

கோவை மாநகராட்சி இளநிலை உதவியாளரிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக வார இதழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வருவாய்ப் பிரிவில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றும் தம்புராஜ் ஆர்.எஸ்,புரம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வருகிறேன். ஜெய்சங்கர் என்பவர் கடந்த ஜனவரி 5ஆம்தேதி கோவை மாநகராட்சி பொதுத் தகவல் அலுவலருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விண்ணப்பம் அனுப்பி எனது தனிப்பட்ட சொத்துகள் மற்றும் வேலைவாய்ப்பு விவரங்கள் குறித்தும், எனது பணி பதிவேட்டின் விவரங்களைப் பார்வையிட அனுமதி கேட்டதன் பேரில் கோவை கிழக்கு மண்டல உதவி ஆணையரின் அனுமதி
பெற்று அதை புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து ஜெய்சங்கர் நடத்தி வரும் வார இதழில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த செய்தியால் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டதால் என்னைக் குறித்து தவறான செய்தி வெளியிட்ட ஜெய்சங்கரை கடந்த ஜூன் 23ஆம் தேதி சந்தித்து ஏன் தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்து எனக் கேட்டேன்.

அதற்கு அவர் ரூ.10 லட்சம் கொடுத்தால் என்னை பற்றி செய்தி வெளியிடுவதை நிறுத்தி விடுவதாகக் கூறி மிரட்டினார். இது குறித்து காவல் துறையில் புகார் கொடுக்க கூடாது என கொலை மிரட்டலும் விடுத்தார்.

எனவே இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் தெரிவித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஆர்.எஸ்.புரம் போலீஸார் ஜெய்சங்கரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Views: - 312

0

0