மாணவியின் தலைமுடியை இழுத்து தாக்குதல்… கல்லூரி முதல்வர் 5 மணிநேரம் சிறைபிடிப்பு ; மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
8 March 2024, 2:32 pm
Quick Share

உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவியை கல்லூரி முதல்வர் தலை முடியை இழுத்து தாக்கிய சம்பவத்தால் ஆத்திரமடைந்த மாணவர்கள், கல்லூரி முதல்வரை 5 மணி நேரம் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. கல்லூரியில் காலை மற்றும் மாலை என இருப்பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மாலை வகுப்பில் 3-ம் ஆண்டு இளங்கலை வணிகவியல் (B.com) படிக்கும் மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது.

அப்போது வேறு துறையைச் சார்ந்த மாணவர்களுக்கும் அதே நேரம் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மாலை 4 மணியளவில் இளங்கலை வணிகவியல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் போராட்டத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

அதைத் தொடர்ந்து, அங்கு வந்த முதல்வர் கல்யாணி, ஒரு மாணவியிடம் செல்போனை பிடுங்கியும், தலை முடியை பிடித்து இழுத்து தாக்கியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் கல்லூரிக்கு வந்த ஆசிரியர் வாசுதேவன் என்பவரும் மாணவர்களை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி முதல்வரை சிறைபிடித்து 5 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், கல்லூரியில் துணை வட்டாட்சியர் சந்திரசேகர், காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் ஆகியோர் கல்லூரி முதல்வர் கல்யாணி மற்றும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, முதல்வர் அறையில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் கல்லூரி முதல்வர் மன்னிப்பு கேட்டதால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். உடுமலை அரசு கலைக் கல்லூரி முதல்வர் மாணவி ஒருவரின் தலைமுடியை இழுத்து தாக்கிய சம்பவத்தில் முதல்வர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மாணவர்கள்
5 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் உடுமலை அரசு கலைக்கல்லூரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 139

0

0