பற்றி எரியும் பல்லடம்… 4 பேர் வெட்டிக் கொலை ; பேருந்தை மறித்து பாஜகவினர் சாலை மறியலால் பதற்றம்.. போலீசார் குவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2023, 2:10 pm
BJP Mariyal - Updatenews360
Quick Share

பற்றி எரியும் திருப்பூர்… 4 பேர் வெட்டிக் கொலை ; பேருந்தை மறித்து பாஜகவினர் சாலை மறியலால் பரபரப்பு!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூர் ஒன்றிய பஞ்சாயத்து கிளை தலைவராக இருப்பவர் மோகன்ராஜ் இவருக்கு சொந்தமான இடத்தை கடந்த நான்காண்டுகளுக்கு முன்னர் ஒரு உணவகத்திற்கு வாடகைக்கு விட்டிருந்தார்.

அந்த உணவகத்தின் எதிரே வெங்கடேஷ் என்பவர் கோழிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த கோழி கடையில் இருந்து உணவகத்திற்கு கோழி இறைச்சி பெறப்பட்டதாகவும் அதற்கு பணம் கொடுக்கவில்லை என உணவகத்தில் இருந்த சிலிண்டரையும் கோழி கூண்டுகளையும் வெங்கடேஷ் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோகன்ராஜின் பெரியப்பா மகன் செந்தில் குமாரிடம் வெங்கடேஷ் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.

இரண்டு மாதங்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில் வெங்கடேஷ் தானாகவே வேலையை விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் மோகன் வீட்டின் அருகே அமர்ந்து மது அருந்தி பாட்டில்களை உடைத்துள்ளனர்.

அவர்களை கண்ட மோகன்ராஜ் வெளியே செல்லுமாறு கூறி உள்ளார். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து மோகன்ராஜ் வீட்டுக்கு வந்த நிலையில் தனது நண்பர்களுடன் வெங்கடேசன், மோகன் ராஜ் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் .

அவர்களை மோகன்ராஜ் குச்சியை எடுத்துக்கொண்டு சாலை வரை விரட்டி உள்ளார். மோகன்ராஜை தடுக்க அவரது தாய் புஷ்பவதி மற்றும் மனைவி , மகன் என பின்னேயே சென்றுள்ளனர்.

சாலையின் எதிர்புறம் சென்று அவர்கள் மறைந்து விட்டதால் மோகன்ராஜ் திரும்பி வீட்டிற்கு செல்ல திரும்பினார். அப்பொழுது அரிவாளுடன் ஓடி வந்த வெங்கடேசனை கண்ட புஷ்பவதி அவரை தடுக்க முயன்றுள்ளார்.

இதனால் புஷ்பவதியின் இரண்டு கைகளையும் வெங்கடேஷ் துண்டாக வெட்டி கொலை செய்தார். தடுக்க முயன்ற மோகன்ராஜ் கையையும் துண்டாக வெட்டி கொலை செய்தார்.

சப்தம் கேட்டு விரைந்து வந்த மோகன்ராஜின் சகோதரர் செந்தில்குமார் மற்றும் சித்தி ரத்தினம்மாள் கைகளையும் வெட்டி கொலை செய்தார். இதனால் பயந்து போன மோகன்ராஜின் மனைவி தனது மகனை காப்பாற்றிக் கொண்டு வீட்டில் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார்.


பின்னர் செல்போன் மூலமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்து சென்று பார்க்கையில் 4 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.

மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் தடயங்களை சேகரித்து விசாரித்து வந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் தங்கள் பகுதியில் பாதுகாப்பு இல்லை எனவும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறிய அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். சம்பவம் குறித்த தகவல் அறிந்த மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானிஸ்வரி நேரில் வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.

மேலும் ஐந்து தனி படைகள் அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் வெங்கடேஷ் மற்றும் அவரது கூட்டாளியான செல்லமுத்து, சோனை முத்தையா என்ற மூவரையும் தேடி வந்தனர்.

இதில் பல்லடம் அருகே சுற்றித்திரிந்த செல்லமுத்துவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் மற்றும் அவரது கூட்டாளி சோனை முத்தையா இருவரையும் பிடிக்க தென் மாவட்டங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

மது அருந்திக் கொண்டிருந்த நபர்களை வெளியே செல்ல கூறிய போது முன்விரோதம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த அரசு பேருந்தை மறித்து பாஜகவினர் மறியலில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 391

0

0