கைக்குழந்தையை தவிக்கவிட்டு தாய் தற்கொலை : கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் விபரீதம்!!

Author: kavin kumar
24 January 2022, 7:23 pm
Quick Share

திருவாரூர் : திருவாரூர் அருகே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கணவன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் அருகே மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கேசவமூர்த்தி (30). இவர் தனியார் ஏர்டெல் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்கிறார். இவருக்கும் பாபநாசம் அருகே உள்ள கோவிந்த குடியைச் சேர்ந்த பிரியதர்ஷினி (26) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து இருவீட்டின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்சமயம் 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில், கேசவமூர்த்தி தினமும் குடிபோதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு குடித்துவிட்டு வந்த கேசவமூர்த்தி, மனைவியிடம் வழக்கம்போல் சண்டையிட்டார். இதில் மனமுடைந்த பிரியதர்ஷினி  கணவர் மற்றும் குழந்தைகள் தூங்கியவுடன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் சென்ற திருவாரூர் நகர காவல்நிலைய போலீசார் பிரியதர்ஷினியின் உடலை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.இதுகுறித்து உயிரிழந்த பிரியதர்ஷினியின் சித்தி கவிதா கூறுகையில்.. தொடர்ந்து எங்கள் வீட்டுப் பெண்ணை கேசவமூர்த்தி குடித்துவிட்டு மது போதையில் தினமும் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

மேலும் அவர் தூக்கு மாட்டி கொண்டது குறித்து கூட எங்களுக்கு சொல்லவில்லை. அந்த ஊர் மக்கள் சொல்லித்தான் எங்களுக்கு தெரிந்தது நாங்கள் நேரடியாக சென்று மருத்துவமனையில் பார்த்த பொழுது அவர் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆகையால் பிரியதர்ஷினி உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆகியுள்ளதால் திருவாரூர் வருவாய் கோட்டாச்சியர் பாலச்சந்திரன் இன்று விசாரணை நடத்தினார்.

இதனிடையே பிரியதர்ஷினியின்  அண்ணன் பிரவீன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருவாரூர் நகர காவல்துறையினர் முதற்கட்டமாக சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 3465

0

0