நண்பர்களிடையே எழுந்த சிறு சந்தேகம்… பள்ளி வளாகத்தில் உயிரிழந்த 10ம் வகுப்பு மாணவன் ; காரணமான சக மாணவர்கள்…!!

Author: Babu Lakshmanan
10 March 2023, 5:55 pm
Quick Share

திருச்சி அருகே பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்துவரும் கோபி என்பவரது மகன் மெளலீஸ்வரன் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் படித்துள்ளனர். அப்பொழுது, சக மாணவர்கள் சிறு சிறு கற்களை தூக்கி போட்டு விளையாடியதாக தெரிகிறது.

இதில் சகமானவர்கள் மௌலீஸ்வரன் கற்களை தூக்கி வீசியதாக தவறாக எண்ணி, மாணவன் மெளலீஸ்வரனை 3 மாணவர்கள் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், மாணவன் மௌலீஸ்வரன் படுகாயம் அடைந்துள்ளார். இதை அடுத்து ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவன் மெனலீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டார். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மெளலீஸ்வரனின் பெற்றோர்கள் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் திருச்சி நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், மூன்று மாணவர்களை தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Views: - 481

0

0