கடை வராண்டாவில் படுத்து துவங்குவதில் தகராறு : ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் கல்லால் அடித்து கொலை

Author: Babu Lakshmanan
19 January 2023, 8:48 am
Quick Share

திருச்சியில் கடை வராண்டாவில் இடம் பிடிப்பதில் எழுந்த போட்டியில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (60). மத்திய அரசு நிறுவனமான திருச்சி ஆல் இந்திய ரேடியோ நிலையத்தில் தோட்டத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப பணி ஓய்வு பெற்றார்.

அதன் பின்னர் மனைவியுடன் வசித்து வந்த நிலையில், திடீரென அவரது மனைவி இறந்து விடவே, சிறிது காலம் திருமணமான மகளின் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளின் வீட்டிலிருந்து வெளியேறினார்.

பின்னர் ஸ்ரீரங்கம் கிழக்கு சித்திரை வீதி பகுதியில் கோவில்களில் அன்னதானம் வாங்கி சாப்பிட்டு விட்டு, கடை வராண்டாவில் படுத்து தூங்கி வந்தார். அதே கடை வரண்டாவில் வேறு சிலரும் இரவு படுத்து தூங்குவார்கள்.

இந்நிலையில், இங்குள்ள கடை வராண்டாவில் படுத்து தூங்க ஈரோடு மாவட்டம், பவானி பகுதியைச் சேர்ந்த முருகேசன் (39) என்பவர் கட்டிட வேலைக்கு சென்று விட்டு வந்தார். அப்போது, இடம் பிடிப்பதில் நேற்று நள்ளிரவு கந்தசாமிக்கும், முருகேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த முருகேசன் அங்கு கிடந்த சிமெண்ட் கான்கிரீட் கல்லை தூக்கி கந்தசாமியின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் கந்தசாமி துடிதுடித்து சம்பவ இடத்தில் இறந்தார். பின்னர் முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று கந்தசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தப்பி ஓடிய முருகேசனை கைது செய்தனர்.

விசாரணையில் கடை வராண்டாவில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

Views: - 469

0

0