திருமா.,வுக்கு எதிராக பேசிய ராணுவ வீரருக்கு விசிக-வினர் கொலை மிரட்டல் ; ஊர்வலமாக சென்று குடும்பத்திற்கு பாஜக ஆதரவு.. நெகிழ்ந்து போன அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
29 November 2022, 6:18 pm

வி.சி.க.தலைவர் திருமாவளவன் எம்.பி.க்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டதற்கு, அக்கட்சி நிர்வாகியால் மிரட்டப்பட்ட ராணுவ வீரர் குருமூர்த்தியின் வீட்டினருக்கு பா.ஜ.க.வினர் ஊர்வலமாக சென்று ஆதரவு தெரிவித்தது அண்ணாமலைக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்‌ மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. மேகாலயாவில் சி.ஆர்.பி.எப். வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் புத்தக வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., தமிழ்நாட்டை தனி நாடாக அமைப்பதே தமிழ் தேசியத்தின் இலக்கு என பேசியிருந்தார்.

இதைக் கண்டித்தும், திருமாவளவன் எம்.பி.க்கு எதிர்ப்பு தெரிவித்தும் சி.ஆர்.பி.எப்.வீரர் குருமூர்த்தி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இந்தச்செயல், வி.சி.க. தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, சி.ஆர்.பி.எப். வீரர் குருமூர்த்தியை போனில் தொடர்புகொண்ட வி.சி.க.வினர் அவரை மிரட்டி பேசியதாக தெரிகிறது.

இதுதொடர்பான ஆடியோவை, ராணுவ வீரர் குருமூர்த்தி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது தமிழக அரசியலில் தற்போது பெரும் சூட்டை கிளப்பியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களின் மிரட்டலை தொடர்ந்து, ராணுவ வீரர் குருமூர்த்திக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க. தற்போது களத்தில் இறங்கியுள்ளது. ராணுவ வீரர் குருமூர்த்தியை போனில் தொடர்புக்கொண்டு பேசிய தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை, தனது ஆதரவை தெரிவித்ததுடன், அவரது குடும்பத்திற்கும் தமிழக பா.ஜ.க. துணையாக நிற்கும் என தெரிவித்திருந்தார்.

இதன்தொடர்ச்சியாக தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலையின் ஆதரவைத் மெய்ப்பிக்கும் பொருட்டு, ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் ஊரில் உள்ள ராணுவ வீரர் குருமூர்த்தியின் வீட்டாருக்கு ஆதரவுத்தெரிவித்து விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் வி.கே.சுரேஷ்குமார், தலைமையில் 200க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் ஊர்வலமாக சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது, ராணுவ வீரர் குருமூர்த்தியின் குடும்பத்தினருடன் செல்போனில் பேசிய மாநிலத்தலைவர்‌ அண்ணாமலை, உங்களது குடும்பத்திற்கு பா.ஜ.க. பாதுகாப்பாக இருக்கும் என உறுதி அளித்ததாக தெரிகிறது. இந்நிகழ்ச்சியில், பா.ஜ.க. நிர்வாகிகள்‌ பலர் கலந்து கொண்டனர்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?