17 வயது சிறுவனை கடத்தி செல்போன், பணம் பறிப்பு ; 3 இளைஞர்களை கைது செய்த போலீசார்… 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Author: Babu Lakshmanan
29 November 2022, 5:48 pm
Arrest - Updatenews360
Quick Share

திருப்பூரில் 17 வயது சிறுவனை கடத்தி செல்போன் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது நண்பன் வீட்டிற்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்த போது, வலையங்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென சிறுவனை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர் அருகில் உள்ள ஒரு காலி இடத்திற்கு சிறுவனை அழைத்து சென்று கயிற்றால் கை, கால்களை கட்டிப் போட்டு, சிறுவனை தாக்கி அவனிடமிருந்த செல்போனை மற்றும் பணத்தை பறித்து விட்டு மூவரும் தப்பி சென்றதாக தெரிகிறது.

இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் உதவியுடன் வீட்டிற்கு சென்ற சிறுவன் பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்து, பெற்றோருடன் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளான். இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனை கடத்திச் சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தியதில், சாமுண்டிபுரத்தை சேர்ந்த சூர்யா (வயது 24), நவீன்குமார் (24), கோகுல் (19) ஆகிய 3 பேரும் சேர்ந்து சிறுவனை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

மேலும் மூவரும் காந்திநகர் ஈபி காலனியில் இருப்பதை அறிந்த போலீசார் மூவரையும் கைது செய்து, மூன்று பேர் மீதும் கடத்தல், கொலைமிரட்டல் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரில் சூர்யா மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும், குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்று வெளியே வந்துள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 643

0

0