டெல்லியில் ஸ்விட்ச் ஆப்… தமிழகத்தில் பீஸ் அவுட் ; பாஜக வேட்பாளர் ராதிகா விமர்சனம்…!!!

Author: Babu Lakshmanan
6 April 2024, 1:41 pm

அடிப்படை வசதி கூட செய்துதராமல் ஓட்டு கேட்டு வந்தால் அவர்களை துரத்தி அடியுங்கள் என பாஜக நிர்வாகி சரத்குமார் ஆவேசமடைந்ததால் பரபரப்பு நிலவியது.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை ராதிகாவும், அவரது கணவர் நடிகர் சரத்குமாரும், சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகர்ப்புறங்களிலும், கிராமப் பகுதிகளிலும் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பொதுமக்களிடையே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: பிரதமர் இங்கேயே வீடு எடுத்து தங்கினாலும்… பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது : அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்..!!

அப்போது பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா பேசியதாவது:- நான் உங்கள் சகோதரியாக, சித்தியாக விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளராக தாமரை சின்னத்தில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து மிகப் பெரிய வெற்றியை தேடி தந்தால், தொகுதியில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி, எனக்கு வாய்ப்பளித்தால் என் கடமையை முழுமையாக நிறைவேற்றுவேன்.

சிவகாசியில் இருந்து டெல்லிக்கு பாலமாக இருப்பேன். வெளிநாட்டில் கூட மீண்டும் பிரதமராக மோடி வருவார் எனக் கூறப்படும் நிலையில், 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. நானும், என் கணவர் நாட்டாமை சரத்குமாரும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை தீர்வு காண ஆய்வு செய்து வருகிறோம்.

மேலும் படிக்க: சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் மோசடி.. நிர்பந்தத்தால் தனி சின்னத்தில் போட்டி ; வைகோ குற்றச்சாட்டு…!!

நீதிமன்றத்தில் நடந்து வரும் பட்டாசு தொழில் வழக்கு என்பது இறுதி கட்டத்தில் உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டருக்கு தடை விதித்து வரியை உயர்த்தியதால் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பிஜேபிக்கு என ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லாத நிலையில் எண்ணற்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நான் இதுவரை அரசியலுக்கு வந்ததில்லை. தற்போது தான் முதல் முதலாக வேட்பாளராக பாஜக சார்பில் போட்டியிடுகிறேன். பாஜக வெற்றி பெற்றால் நமக்கெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் திமுக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்? என அறிவிக்காமலேயே தேர்தலை சந்திக்கின்றனர். இபிஎஸ்- தேமுதிக கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக யாரை அறிவிப்பார்கள்!

நாங்கள் வெற்றி பெற்றால் டெல்லி சென்று போராடுவேன். திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருவேன் என்று கூறும் ஈபிஎஸ்க்கு, டெல்லியில் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இங்கே பீஸ் போய் அவுட்டாகி விட்டார். மாநிலத்தில் எதிர்க்கட்சியாக மட்டுமே அதிமுக உள்ளது. உங்கள் தொகுதியின் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்க உங்கள் பிரதிநிதியாக செயல்பட எனக்கு வெற்றி வாய்ப்பை தாருங்கள், என்றார்.

மேலும் அவர் கூறும் போது:- சித்தியாக, வாணி-ராணியாக உங்கள் முன்பு வேட்பாளராக வாக்கு கேட்டு வந்துள்ள நான், உங்களுக்காக கண்டிப்பாக இங்கே தங்கி உழைப்பேன். என்னை நம்புங்கள். இந்தத் தொகுதியில் தான் விருதுநகரில் எனது வீடு உள்ளது. தேர்தல் தினத்தன்று அனைவரும் ஓட்டு போடுங்கள். வாக்களிக்காமல் இருக்க கூடாது. அது நம்முடைய ஜனநாயக கடமை, என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற நடிகர் சரத்குமார் பேசியதாவது:- இங்கு நடக்கும் நிகழ்ச்சி செல்போன் மூலமாக அமெரிக்காவில் தெரியும் வரை தொழில்நுட்பம் உயர்ந்து விட்டது. காரணம் டிஜிட்டல் இந்தியா முன்னேற்றம் தான். கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த ஆட்சியை தந்து உலகறிய இந்தியாவை தலை நிமிரச் செய்து இந்தியனின் பெருமையை உயர்த்தியவர் பிரதமர் நரேந்திர மோடி.

பத்தாண்டு கால ஆட்சி குறை சொல்ல முடியாத, ஊழல் இல்லாத, சாதனை ஆட்சியாக இருந்தது. 67 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் 16 கோடி எரிவாய் இணைப்பு தான் கொடுக்கப்பட்டது. ஆனால் பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சியில் 18 கோடி எரி வாயு இணைப்பு கொடுத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

குலசேகரபட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் தளம் அமைத்து இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், அதே போன்று விருதுநகர் மாவட்டத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா அமைத்து இரண்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் தேசத்திற்கான தேர்தல். உலக அளவில் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவருக்கும் தேசப்பற்று வரவேண்டும்.

பட்டாசு தொழில் எந்த விதத்திலும் மூடப்படாமல் நிரந்தரமாக செயல்படுவதற்கு உத்திரவாதம் தரப்படும். நிர்வாகத் திறமை கொண்டு மக்களைப் பற்றி சிந்திப்பவர் உங்கள் வேட்பாளர் ராதிகா. இஸ்ரேல் நாடு போல விவசாயம் செய்வதற்கு விருதுநகர் மாவட்டத்திலும் நீர் ஆதாரம் எங்கெங்கு உள்ளது என நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம்.

மக்களுக்கு அன்றாடம் தேவையான அடிப்படை வசதி செய்து கொடுக்காத, மக்களை கஷ்டப்படுத்துபவர்களுக்கு ஏன்? எதற்காக ஓட்டு போடுகிறீர்கள். அவர்கள் மீண்டும் வந்தால் தட்டி கேளுங்கள், அல்லது துரத்தியடியுங்கள். உங்களுக்காக செயல்படுபவர்களை பதவிக்கு கொண்டு வாருங்கள். தாமரைக்கு வாக்களித்தால் கிராமம், மாநிலம், நாடு சிறப்படையச் செய்வோம், என்றார்

கந்தக பூமியான சிவகாசி வட்டாரத்தில் மாலை வேளையிலும் வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தாலும் வேட்கை குறையாததால் அனைவரும் சிரமம் அடைந்த நிலையில், பொதுமக்களிடையே வழங்கப்பட்டிருந்த மோடியின் முகமூடி அட்டையை கைகளில் வைத்திருந்த வாக்காளர்கள் அதனை விசிறியாக பயன்படுத்தியதை காண முடிந்தது.

  • Famous Actress Paired With Actor Soori சூரிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை… வாழ்க்கை ஒரு வட்டம் என்பது சரிதான் போல!
  • Views: - 305

    0

    0