கோவிலை இடிக்க எதிர்ப்பு… மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பொதுமக்கள் ; போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
1 December 2022, 10:47 am

விருதுநகர் ; விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள கோயிலை நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் இடிக்க வருவதை கண்டித்து பொதுமக்கள் தீக்குளிக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

அருப்புக்கோட்டை மணி நகரம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள உச்சி செட்டியார் தெருவில் குறிப்பிட்ட சமுதாயம் சார்பில் சந்தனமாரியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த திருக்கோவிலுக்கு தற்போது அனைத்து சமுதாயத்தினரிடமும் இருந்து நன்கொடை பெற்று கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. அனைத்து சமுதாய மக்களும் இந்த கோவிலில் வழிபாடு நடத்துகின்றனர்.

இந்நிலையில் நகராட்சி இடத்தில் கோயில் உள்ளதாக தனிநபர் இந்த கோவிலை இடிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவிலை இடிக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

கோவிலை இடிக்ககோரி வழக்கு தொடர்ந்த தனிநபரை கண்டித்து மணி நகரம் பகுதியை சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் கறுப்புக்கொடி கட்டியும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் நீதிமன்றம் கோவிலை இடிக்க உத்தரவிட்டதால் நகராட்சி அதிகாரிகள் இன்று கோவிலை இடிக்க வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவிலை சுற்றி அமர்ந்தனர். மேலும், பதட்டம் நிலவியதால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

கோவிலை சுற்றி அமர்ந்துள்ள பொதுமக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, திடீரென அப்பகுதி மக்கள் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றால் பதட்டம் ஏற்பட்டது. போலீசார் மண்ணெண்ணெய் கேன்களையும், பொதுமக்களையும் அப்புறப்படுத்தி கோவிலை இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

  • devi sri prasad complains that turkish singer copied his pushpa movie song என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!