‘தாய் கிழவி.. தாய் கிழவி’.. நடனமாடி பாடம் கற்பிக்கும் அங்கன்வாடி பள்ளி ஆசிரியை.. வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
23 March 2023, 3:54 pm

விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரத்தில் நடனமாடியும், பாடல்களை பாடியும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வி கற்றுக்கொடுக்கும் அங்கன்வாடி பள்ளி ஆசிரியையின் முயற்சிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மதுரை செல்லூரை சேர்ந்த ஜெய்லானி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அங்கன்வாடி ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார்.

சிறார்களுக்கு தனது கலை திறமையை கொண்டு கல்வி கற்று கொடுத்து வருகிறார் ஆசிரியை ஜெய்லானி. நடனமாடிய படியும், கற்று கொடுக்கும் பாடங்களுக்கு ஏற்ப பாடல் மெட்டுக்களை தயாரித்து கல்வி கற்று கொடுப்பது, முக்கிய தினங்களில் அன்றைய தினத்தின் சிறப்புகளை மாணவ செல்வங்களுக்கு தமக்கே உரிய பாணியில் கலையோடு எடுத்து சொல்வது என குழந்தைகளுக்கு கல்வி மீதான ஆர்வத்தை அடிப்படை வகுப்பு மூலம் அதிகப்படுத்தி வருகிறார்.

இதற்கு ஒரு படி மேலே சென்று குழந்தைகளுக்கு நகம் வெட்டி விடுவது, கைகளை சுத்தமாக வைத்து கொள்ள அறிவுறுத்தி கைகளை கழுவி விடுவது என குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களையும் கற்று கொடுத்து வருகிறார்.சிறார்களுக்கு கல்வி மீது மட்டுமல்லாமல் விளையாட்டு மீதான ஆர்வமும் ஏற்பட தினசரி அவர்களுக்குள் பல்வேறு விளையாட்டு போட்டிகளையும் நடத்தி அசத்தி வருகிறார். அவர் எடுக்கும் முயற்சியின் பலனாக குழந்தைகளும் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர்.

தமிழ், ஆங்கில பாடங்களை எந்தவித திணறல் இல்லாமல் சொல்லி அசத்துகிறார்கள் சிறார்கள். ஆசிரியை முயற்சியால் 10 குழந்தைகள் மட்டுமே வந்த அங்கன்வாடியில் தற்போது 25 குழந்தைகள் பயின்று வருகின்றனர். பெற்ற பிள்ளைகளை போல் நினைத்து அர்ப்பணிப்போடு சிறார்களுக்கு தனது கலை திறன் மூலம் பாடங்கள் கற்று கொடுப்பது, நல்லொழுக்கம், ஆடல் பாடல், விளையாட்டு என பன்முக தன்மையுடன் கூடிய அங்கன்வாடியை உருவாக்கியுள்ள இந்த ஆசிரியையின் முயற்சியை பாராட்டி வருகின்றனர்

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!