நிர்ணயம் செய்யப்பட்ட சம்பளம் எங்கே? தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம் : போலீசார் குவிப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan23 March 2023, 10:44 am
கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 648 ரூபாய் சம்பளம் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 412 ரூபாய் மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் வழங்குவதாகவும் அதேபோல் பேரூராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 529 ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 475 ரூபாய் மட்டுமே வழங்குவதாகவும் எனவே நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி பேரூராட்சிகளில் பணிபுரியும் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று பணிகளைப் புறக்கணித்து போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் எடுக்கப்படாமல் தேங்கியுள்ளது.
முற்றுகை போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பிற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதே சமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் 50க்கும் மேற்பட்ட போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.