சாலையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி : தலைமறைவான கணவனுக்கு போலீசார் வலை…

Author: kavin kumar
20 February 2022, 6:22 pm
Quick Share

மதுரை : அலங்காநல்லூர் அருகே இளம்பெண் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குறவன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேங்கையன். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வேங்கையன் சென்னையில் குடும்பத்துடன் தங்கி, தனியார் நிறுவனத்தில் காவலாளி ஆக பணிபுரிந்து வந்தார். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கண்ணம்மாள் கணவரை பிரிந்து, மதுரையில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறவன்குளத்துக்கு திரும்பி வந்த வேங்கையன், மனைவி கண்ணம்மாளை சமரசம் செய்து தன்னுடன் அழைத்துச் சென்று வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று சாலையோரத்தில் கண்ணம்மாள் தலை மற்றும் கழுத்துப்பகுதியில் அரிவாளால் வெட்டி கொலை செய்யபட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினார்.

கண்ணம்மாளை வெட்டி படுகொலை செய்த கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில் கண்ணம்மாளின் கணவர் வேங்கையன் தலைமறைவாகி விட்டார். எனவே அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. கண்ணம்மாளின் கொலையில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் சிக்கிய பின்பு கண்ணம்மாளின் கொலைக்கான முழுவிபரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 507

0

0