வள்ளலாருக்கும் காவி உடை சாத்துவதா? ஆளுநர் ஆர்என் ரவியின் கருத்துக்கு கே. பாலகிருஷ்ணன் கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2023, 2:24 pm
RN Ravi Bala -Updatenews360
Quick Share

கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-ஆவது ஜெயந்தி விழாவில் ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சு சர்ச்சையானது. அதாவது, சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வரிகள் சனாதன தர்மத்தின் வெளிப்பாடு. எல்லா உயிர்களையும் நம்மில் ஒரு அங்கமாக பார்ப்பது தான் சனாதன தர்மம்.

வள்ளலார் சனாதன தர்மத்தின் ஒளிரும் சூரியன் என பேசியது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தஞ்சையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆளுநரின் கருத்து வள்ளலாரையே இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.

வள்ளலார் தான் ஆன்மிகத்தின் சனாதனத்தின் உச்சம், சனாதனம் தான் இந்தியாவில் நீண்ட காலமாக ஆட்சி செய்கிறது என்பது போல ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார். சனாதனம், மதவெறி என சாதி மேலாதிக்கம் போன்றவற்றை கடுமையாக எதிர்த்தவர் வள்ளலார்.

அப்படிப்பட்டவரை ஆளுநர் சனாதனத்தின் உச்சம் என்று கூறுவது, வள்ளலாருக்கும் காவி உடை சாத்த நினைப்பது, முறையல்ல வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே போல இந்தியாவை பற்றி காரல் மார்க்ஸ் தவறாக பேசியிருப்பதாக ஆளுநர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பேசிய சி.பி.எம். மாநில செயலாளர், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்துவது பாராட்டுக்குரிய நல்ல விஷயம். ஒத்த கருத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை ஈடுபட்டுள்ளனர்.

சொந்த அனுபவத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. பாஜக 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவவுள்ளது எனவும் கூறினார்.

Views: - 250

0

0