இன்னும் 15 மாசம் இருக்குது.. ஜெயக்குமார் வைத்த ட்விஸ்ட்!

Author: Hariharasudhan
6 November 2024, 5:41 pm

கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் 15 மாதங்கள் உள்ளது அதனை இபிஎஸ் அறிவிப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாநிலச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 2026 தேர்தல் இலக்கு குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து, கூட்டம் முடிந்து வெளியே வந்த அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2026ஆம் ஆண்டு மக்கள் விரும்புகின்ற ஆட்சியைக் கொடுக்க வருகிறோம். அப்படி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடத்தில் இருக்கிறது.

ஒரு ஆட்சி சரியில்லை அல்லது கட்சி சரியில்லை என்றால் மட்டுமே விமர்சனம் வரும். அதிமுக சரியாக இருப்பதால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எங்களை (அதிமுக) விமர்சிக்கவில்லை. எங்களைப் பற்றி பேசவில்லை என்றால், ஒரு சிறப்பான ஆட்சி 31 ஆண்டு காலம் கொடுத்திருக்கிறோம் என்று அர்த்தம்.

CUTE VIJAY

எனவே தான், எங்களை விமர்சிக்க வேண்டிய தேவையே ஏற்படவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி சீரிய முறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுகவின் மக்கள் விரோத, ஜனநாயக விரோதப் போக்கை மக்களிடம் கொண்டு செல்வோம். விலைவாசியைக் கட்டுப்படுத்த, மக்கள் திட்டங்களில் திமுக அரசு கவனம் செலுத்துவதில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியும், ஸ்டிக்கரும் ஒட்டி மீண்டும் தொடங்கியது போல் காண்பிக்கிறது.

தென் மாவட்டத்தில் (திருநெல்வேலி) பட்டியலின சிறுவன் ஒருவர் தாக்கப்பட்டு இருக்கிறார். அந்த நிலை தான் இன்று தமிழ்நாட்டில் உள்ளது. அப்படி ஒரு நிலைமை இருக்கும் பொழுது, இந்த அரசை யார் தான் பாராட்டுவார்கள்? இவர்களே மாறி மாறி பாராட்டிக் கொள்கிறார்கள்.

இதையும் படிங்க: காமராஜரும், விஜயும் ஒன்றா? எஸ்.வி.சேகர் சொன்ன லாஜிக்!

ஒன்று அப்பா மகனை பாராட்டுவார்; அல்லது மகன் அப்பாவை பாராட்டுவார். இதுதான் தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கமோ, அமெரிக்காவோ, ரஷ்யாவோ இந்த அரசைப் பாராட்டவில்லை” எனக் கூறினார். மேலும், தவெகவுடன் கூட்டணி தொடர்பான கேள்விக்கு, தேர்தலுக்கு 15 மாதங்கள் உள்ளது என்றும், கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்றும் ஜெயக்குமார் பதிலளித்தார்.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 112

    0

    0