திட்டமே அறிவிக்கல.. அதுக்குள்ள விண்ணப்பமா..? ரூ.1000 உரிமைத் தொகையில் மோசடி… அரசியல் கட்சியினர் எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
14 February 2022, 4:51 pm
Quick Share

திமுக அறிவித்த வாக்குறுதியில் ஒன்றான மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை பற்றி தமிழக அரசு இன்னும் அறிவிப்பு வெளியிடாத நிலையில், அதற்கான விண்ணப்பங்கள் விநியோகித்து வருவதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானது, மாதாந்தோறும் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதுதான். ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும், ஒரு சில வாக்குறுதிகளையே திமுக நிறைவேற்றியுள்ளதாகவும், நீட் ரத்து, மகளிருக்கான ரூ.1,000 உரிமைத் தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை திமுக இன்னமும் நிறைவேற்றவில்லை என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

அதற்கேற்றாற் போலவே, உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ரூ.1,000 எப்போ தருவீங்க..? என்ற கேள்வியை பெண்கள் கேட்கத் தொடங்கி விட்டனர். இதனால், திமுகவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுவிட்டது.

இதனிடையே, முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் அடங்கிய மகளிருக்கான ரூ.1,000 தொகைக்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் திமுகவினரால் விநியோகிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும், இந்த விண்ணப்பங்கள் தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை பற்றி தமிழக அரசு இன்னும் அறிவிப்பு வெளியிடாத நிலையில், அதற்கான விண்ணப்பங்கள் எப்படி விநியோகிக்க முடியும் என்றும்..? இதில் ஏதோ முறைகேடு நடத்த முயற்சிகள் நடப்பதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, பாமக இளைஞரணி தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ், தமிழக அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அவை அரசு விண்ணப்பமாகத் தெரியவில்லை.

Anbumani 02 updatenews360

குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை; பயனாளிகள் தேர்வுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்படவில்லை; விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு ஒரு தரப்பினர் விண்ணப்பத்தை வினியோகித்து வருகின்றனர். அதன் பின்னணியில் முறைகேடு செய்யும் நோக்கம் இருக்கலாம். இந்த மோசடிக்கு முதலமைச்சரின் பெயர் பயன்படுத்தக்கூடாது; விண்ணப்ப வினியோகத்தை தடுக்க வேண்டும்!

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் வினியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மோசடியாக வினியோகிப்பவர்களை கைது செய்ய வேண்டும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக எதிர்கட்சியினர் கூறுகையில், “திமுக அரசு பற்றி மக்களுக்கு தெளிவு வந்துவிட்டது. திமுக தலைவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் போது எல்லாம், தேர்தல் வாக்குறுதியை பற்றி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு விழுமா..? என்ற பயம் வந்துவிட்டது. எனவே, இதனை திசைதிருப்பவே, அரசு அறிவிப்பு வெளியிடாத நிலையில், பெயரளவுக்கு விண்ணப்பங்களை விநியோகிக்கத் தொடங்கியுள்ளனர்.

அரசு அறிவிப்பு இல்லாமல் ஒரு திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும். இது அவர்களுக்கு தெரியும். அதேவேளையில், தற்போது, மகளிருக்கான ரூ.1,000 உரிமைத் தொகை திட்டத்தை அரசினால் செயல்படுத்த முடியாது. எனவே, அதற்கான அறிவிப்பை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட தயங்கி வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்தே, இதுபோன்ற விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது,” என்கின்றனர்.

Views: - 540

0

0