11 மருத்துவக்கல்லூரி திறந்தது கலைஞரின் கனவா? திமுக என்ற சுயநலம் விரைவில் அகற்றப்படும் : ஓபிஎஸ் அறிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
14 January 2022, 1:01 pm
Stalin ops - updatenews360
Quick Share

ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டதை சாதனையாக பறைசாற்றிக் கொள்ளும் திமுக அரசிற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சென்னை, அடையாரில் உள்ள க்ரீக் பகுதியில் அமைக்கப்பட்ட பூங்கா, மகிந்திரா சிட்டியில் அமைக்கப்பட்ட பி.எம்.டபிள்யு தொழிற்சாலை, ஓரகடம் பகுதியில் அமைக்கப்பட்ட வாகன பரிசோதனை மையம் போன்ற பல திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டது போன்ற மாயத் தோற்றத்தை தி.மு.க. தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தியது.

அந்த வகையில், 12-01-2022 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளும் தி.மு.க. அரசின் சாதனை போல சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2006-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கத் திட்டமிடுதல்களைச் செய்திருக்கிறோம் என்றும், அது இப்போது நிறைவேறியிருப்பதைப் போலவும், மருத்துவத் துறையில் இந்திய நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்றும் பேசியிருக்கிறார்.

இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் சாதிக்காத வகையில், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் என்ற சாதனையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செய்திருக்கிறது என்றால் அதனைப் பாராட்ட மனமில்லாமல், கலைஞரின் கனவு நிறைவேறி இருக்கிறது என்று சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்’ என்பதற்கேற்ப, தி.மு.க. என்கிற சுயநலம் விரைவில் புறக்கணிக்கப்பட்டு மீண்டும் அ.இ.அ.தி.மு.க. என்கிற பொதுநலம் வீறுகொண்டு எழும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என .தெரிவித்துள்ளார்.

Views: - 192

0

0