தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் 2ஜி வழக்கில் தீர்ப்புவர வாய்ப்பு : வேகமெடுக்கும் நீதிமன்ற விசாரணையால் திமுகவினர் கலக்கம்!!

30 September 2020, 8:45 pm
2 g case kanimohi - a raja - dmk - updatenews360
Quick Share

சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு அக்டோபர் 5 முதல் தினசரி விசாரணை நடக்கப்போவதால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புள்ள சூழலில் திமுகவினர் பெரிதும் கலக்கம் அடைந்துள்ளனர். 2011 தேர்தலில் முக்கிய பிரச்சினையாக எதிரொலித்த மெகா ஊழல், மீண்டும் 2021 தேர்தலில் திமுகவுக்கு எதிராகப் பரபரப்பாகப் பேசப்படுமோ என்ற அச்சம் திமுக நிர்வாகிகளிடமும் தொண்டர்களிடமும் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்தபோது, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், கடந்த 2008-ல் 2ஜி அலைக்கற்றைகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில், ஏல நடைமுறைகளைப் பின்பற்றாததால், அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்குத் தணிக்கைத்துறை தெரிவித்தது.

kanimozhi - a raja - updatenews360

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் 2ஜி ஊழல் வழக்கு பரபரப்பாகப் பேசப்பட்டது. மக்கள் மத்தியில் திமுக மீதி கடும் மக்களின் கடும் கோபத்தை ஏற்படுத்தி அக்கட்சி படுதோல்வி அடைவதற்கு 2ஜி ஊழல் வழக்கு முக்கிய காரணமாக இருந்தது. இவ்வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் மீதி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு எட்டு மாதங்களே இருக்கும் சூழலில் அந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சிபிஐ தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விரைந்து விசாரிப்பதற்கு கனிமொழியும், ஆ.ராசாவும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கொரோனாத் தொற்றைக் காரணம் காட்டி இந்த வழக்கின் விசாரணையைத் தள்ளிப்போட வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஆனால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் கோரிக்கையை டெல்லி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

Government Might Reduce 5G Spectrum Prices To Encourage Telecom Operators

வழக்கின் விசாரணை நாள்தோறும் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றால் கனிமொழியோ, ராசாவோ அதில் கலந்துகொள்வதில் இருந்து விலக்குப்பெறுவது எளிதல்ல. தினமும் நடைபெறும் விசாரணை விரைவில் முடிய வாய்ப்புகள் உள்ளன. அதுவும், இது மேல்முறையீட்டு வழக்கு என்பதால் சிபிஐ நீதிமன்றம் எதன் அடிப்படையில் இருவரையும் விடுதலை செய்ததோ அது குறித்து மட்டுமே வாதங்கள் நடைபெறும். வழக்கின் வாதங்களும் எதிர்வாதங்களும் விரைந்து முடிவதால் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

அப்படி தீர்ப்பு வந்தால் தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவுக்கு மிகவும் சிக்கலான சூழலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட பாதிப்பைப் போல மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான அலை வீச வாய்ப்பு உருவாகும் என்று கூறப்படுகிறது.

பாஜகவுக்கும் எதிராகவும் இந்திக்கு எதிராகவும் கனிமொழி கடுமையான பிரச்சினைகளை எழுப்பி வரும் நிலையில், அவருக்கு இந்த வழக்கு சிக்கலை ஏற்படுத்தும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கும், அவரது குடும்பத்துக்கும் சொந்தமான ரூ. 89 கோடி மதிப்பினாலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருப்பது ஏற்கெனவே திமுக முக்கிய புள்ளிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. ஜெகத்ரட்சகன், கனிமொழி, ஆ.ராசாவுக்கு அடுத்தபடியாக, மத்திய அரசின் பிடி யார் மீது எப்போது இறுகும் என்ற அச்சம் மற்ற திமுக தலைவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. பாஜக எதிர்ப்பையே மையமாக வைத்து திமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் தயாராகிவரும் சூழலில், பாஜகவை எதிர்த்துப் பேசுவதற்கு திமுக தலைவர்கள் அஞ்சும் நிலை உருவாகி வருகிறது.