7 எம்பி சீட்டுக்கு 35 பேர் குழுவா?… அதிர்ச்சியில் திமுக தலைமை!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2024, 10:06 pm
Cong
Quick Share

நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக காங்கிரஸ் மேலிடம் இப்போதே ஆயத்தமாகி விட்டது. இது தொடர்பாக அக் கட்சி தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சை தொடங்குவது, தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து தொடர்ந்து தீவிர ஆலோசனையும் நடத்தி வருகிறது.

இதைத்தொடர்ந்து தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில்தான் தமிழகத்திற்கு 35 நிர்வாகிகள் கொண்ட மெகா தேர்தல் பணிக் குழு ஒன்றை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதலுடன் கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் நியமித்து இருக்கிறார்.

மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான இக்குழுவில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், செல்வப் பெருந்தகை, குமரி அனந்தன், தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், கே ஆர் ராமசாமி, திருநாவுக்கரசர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன், செல்லகுமார், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவின் முக்கிய வேலையே தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது, தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான்.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அகில இந்திய காங்கிரஸ் தமிழகத்திற்கான தேர்தல் குழுவை அமைத்த அடுத்த 18 மணி நேரத்தில் திமுகவும் இதே போல் அதிரடி காட்டியது.

அதன் சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு, நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு என மூன்று தனித்தனி குழுக்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

டி.ஆர்.பாலு தலைமையிலான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சு நடத்தும் குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் பொன்முடி, எம்பிக்கள் ஆ.ராசா, திருச்சி சிவா என மொத்தம் 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில், கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோரும் கனிமொழி எம்பி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில், டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், எழிலரசன், எம்.எம்.அப்துல்லா, எழிலன் நாகநாதன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை இண்டியா கூட்டணிக்கு திமுக தான் தலைமை வகிக்கிறது. அதனால் திமுக தலைவரான ஸ்டாலின் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால் அக்கட்சி இப்படி மூன்று குழுக்களை அமைத்திருப்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

அதேநேரம் திமுக அமைத்துள்ள குழுக்களில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர்கள் உதய நிதி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா மற்றும் சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. குறிப்பாக சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி மீதான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அதேபோல அமைச்சர் உதயநிதி, சபரீசன் ஆகியோர் குறித்து அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்தாண்டு பேசியதாக கூறப்படும் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தது தொடர்பான ஒரு ஆடியோ தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவர் திமுகவில் புறக்கணிக்கப்படுகிறார் என்ற பேச்சும் அடிபட்டது.

ஆனால் அவர்கள் இருவருக்கும் தற்போது திமுகவின் தேர்தல் குழுக்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

அதே நேரம் தமிழகத்தில் தங்களது கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கப்போவது திமுகதான் என்றாலும் கூட அதன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை குழுவில் 7 பேர் மட்டுமே உள்ளனர். அதுமட்டுமின்றி நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக அமைத்துள்ள மூன்று குழுக்களிலுமே அதிகபட்சம்
22 பேர் வரைதான் இடம் பிடித்தும் இருக்கிறார்கள்.

ஆனால் திமுக கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொள்ளும் நிலையில் உள்ள காங்கிரஸ் அமைத்திருக்கும் குழுவிலோ வதவதவென 35 பேர் வரை இடம் பெற்றிருப்பது தமிழக அரசியலில் இதுவரை யாரும் காணாத விசித்திரமாக உள்ளது. இவர்கள் அத்தனை பேரையும் தொகுதி பங்கீட்டு பேச்சின்போது, திமுக அறிவாலயத்திற்குள் அனுமதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வேண்டுமென்றால் ப.சிதம்பரம், கே எஸ் அழகிரி, செல்வப் பெருந்தகை, தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ் போன்ற தலைவர்களை திமுக அழைத்துப் பேசும். மற்றவர்கள் வேண்டாம் அது தேவையற்ற ஒன்று என திமுக கூறுவதற்கான வாய்ப்பே அதிகம்.

“டெல்லி காங்கிரஸ் மேலிடம் தமிழகத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்த குறைவான எண்ணிக்கையில் நிர்வாகிகளை. நியமிக்காமல் அளவுக்கு அதிகமாக நியமித்து இருப்பது கட்சிக்குள் கோஷ்டி பூசல் இருப்பதை கட்சித் தலைமையே ஒப்புக் கொண்டிருப்பதுபோல் இருக்கிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“திமுக தலைவர் ஸ்டாலின், தேசிய அளவில் தனது கட்சியை முன்னெடுத்து செல்வதில் மிகத் தீவிரமாக இருக்கிறார். குறைந்தபட்சம் திமுக 25 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை உரிமையோடு கேட்டுப் பெற முடியும் என்பது திமுகவின் ஒரே சிந்தனையாக உள்ளது. அதனால் தமிழகத்தில் காங்கிரசுக்கு கடந்த தேர்தல் போல ஒன்பது தொகுதிகள் ஒதுக்கப்படுமா? என்பதே சந்தேகமாக இருக்கிறது.

அதிகபட்சமாக காங்கிரசுக்கு 7 தொகுதிகளும் விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், முஸ்லிம் லீக், மதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்தமாக
7 எம் பி சீட்டுகளும் ஒதுக்கிட திமுக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வேண்டுமென்றால் காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி பதவி ஒன்றை திமுக தருவதற்கான வாய்ப்பும் உள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தையை ஏற்கனவே திமுகவும், காங்கிரசும் பேசி முடித்து விட்டதாக கூறப்படும் நிலையில் இனி தொகுதி பங்கீடு என்பது சம்பிரதாயமான ஒன்றாகவே இருக்கும்.

இதுபோன்ற நிலையில் தமிழக காங்கிரஸ் தேர்தல் குழுவில் 35 பேர் எதற்காக நியமிக்கப்பட்டனர் என்பதுதான் தெரியவில்லை. மேலும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ள முக்கிய தலைவர்களில் ப சிதம்பரம் தவிர கேஎஸ் அழகிரி, கே வி தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன்,திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், செல்வப் பெருந்தகை போன்றவர்கள் திமுக 4, 5 சீட்டுகள் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் உள்ளவர்கள்.

ஏனென்றால் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே திமுக தலைவர் ஸ்டாலினுடன் இவர்கள் நெருக்கமான நட்பை கொண்டிருப்பவர்கள். திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் சேரவில்லை என்றால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனிக்கட்சி தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைக்கவும் தயங்க மாட்டார்கள் என்பது அரசியல் வட்டாரத்தில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்று.

அதனால் இந்த 35 பேரில் மூன்று அல்லது நான்கு முன்னணி தலைவர்களை தவிர மற்றவர்களை திமுக கண்டு கொள்ளவே செய்யாது. தேர்தல் தொடர்பான பணிகளை சம்பந்தப்பட்ட மாவட்ட திமுக செயலாளர்களுடன் இணைந்து மேற்கொள்ளுங்கள் என்ற அறிவுரையைத்தான் அறிவாலயம் வழங்கும்.

இந்த நிலையில் ஆளே இல்லாத கடையில் காங்கிரஸ் ஏன் டீ ஆற்றுகிறது?…என்பதுதான் தெரியவில்லை.

எது எப்படியோ, தேர்தல் பணி குழுவில் 35 பேரை நியமித்திருப்பதன் மூலம், தமிழக காங்கிரஸில் உள்ள ஏழு கோஷ்டிகளுக்கும் சம வாய்ப்பை டெல்லி மேலிடம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது, என்பதுதான் உண்மை. 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஆகிய இரண்டிலும் காங்கிரசுக்கு திமுக ஒதுக்கிய மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையே 34 தான். அதற்கு இணையாக தற்போது
35 நிர்வாகிகளுக்கு தேர்தல் பணி குழுவில் இடம் அளித்து காங்கிரஸ் புதிய சாதனை படைத்து இருக்கிறது.

இதன் மூலம் தமிழக காங்கிரஸில் நிலவும் கோஷ்டி பூசலுக்கு டெல்லி மேலிடம் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இவர்கள் சொல்வதிலும்
உண்மை இருக்கவே செய்கிறது!

Views: - 208

0

0