திமுகவை அதிர வைத்த 6 அமைச்சர்கள்… பரிதவிக்கும் CM ஸ்டாலின்..!

Author: Babu Lakshmanan
8 September 2023, 9:06 pm
Quick Share

அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கி தற்போது நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது பற்றி முதலமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதை திமுக அரசு இதுவரை கண்டு கொண்டதாக தெரியவில்லையே என்ற பேச்சு தமிழக அரசியல் களத்தில் பலமாக அடிபடுகிறது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14 ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். 80 நாட்களுக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் உள்ள அவருடைய அமைச்சர் பதவியை பறிக்கவேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்தன் இன்னும் சிலர் தொடர்ந்த வழக்கில் கடந்த ஐந்தாம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. அது திமுக அரசுக்கு மறைமுகமாக சாட்டையடி கொடுத்தது போலவும் இருந்தது.

உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அளித்த அந்த தீர்ப்பில் “எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களின் தகுதி நீக்கம் பற்றி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும், இந்திய அரசியல் சட்டத்திலும் கூறப்பட்டுள்ள போதும், அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்வது பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் என்பது விவாதத்துக்குரியது. அதற்காக ஆளுநருக்கு இந்த உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க முடியாது. மேலும், ஒரு அமைச்சரை, அமைச்சரவையில் இருந்து நீக்க விரும்பினால், அதை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுதான் செயல்படுத்த முடியுமே தவிர, தன்னிச்சையாக செயல்படுத்த ஆளுநரால் முடியாது.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு எந்த பணியும் ஒதுக்கப்படவில்லை. பெயரளவில்தான் அவர் அமைச்சராக உள்ளார். எந்த பணியும் செய்யாதவர் ஊதியம், படிகள் என்று பணப்பலன்களை பெற உரிமையில்லை. சம்பிரதாயத்துக்காக அமைச்சராக நீடிக்கும் அவரால் மாநிலத்துக்கு எந்த பயனும் இல்லை.

தார்மீக அடிப்படையில், குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அமைச்சர்களாக நியமிப்பதை தவிர்க்கவேண்டும் என பிரதமருக்கும், மாநில முதலமைச்சர்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியிருக்கிறது. மக்கள் பிரதிநிதியாக உள்ள அமைச்சர், தனக்கு ஒதுக்கப்பட்ட துறையின் பணிகளை கவனிக்க வேண்டும். எந்த பொறுப்பும் வழங்காமல், இலாகா இல்லாத அமைச்சராக, ஒருவரை நீடிக்க அனுமதிப்பது அரசியல் சட்டத்துக்கும், தார்மீக அடிப்படையிலும் தவறானது. இலாகா இல்லாத அமைச்சராக இருப்பது கேலிக்குரியது.

மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள முதலமைச்சர், அரசியல் சட்ட தார்மீகத்தை மீறி செயல்பட முடியாது. சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவு எடுக்க வேண்டும். அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதால் எந்த பயனும் இல்லை. இது, அரசியல் சட்ட நெறிமுறைகள், நல்லாட்சி, தூய்மையான நிர்வாகத்துக்கு உகந்ததும் அல்ல” என்று நீதிபதிகள் அமர்வு அறிவுறுத்தியது.

ஆனால் இந்த தீர்ப்பு வெளியாகி நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் கூட செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகவே தொடர்ந்து நீடித்து வருகிறார்.

இது தற்போது பெரும் பேசு பொருளாகவும் மாறிவிட்டது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுரையை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டு எப்போது அவருடைய பதவியை பறிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஆனால் செந்தில் பாலாஜி விவகாரத்தை விட சமீப காலமாக திமுகவின் கவனம் எல்லாமே அமைச்சர் உதயநிதியின் சனாதன ஒழிப்பு மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் திமுக அமைச்சர்களான பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஐ பெரியசாமி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பதிலும்தான் திரும்பி இருக்கிறது.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பொன்முடி தொடர்பான விடுதலை வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷிடம் திமுக வக்கீல்கள், “மறு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த வழக்கை நீங்கள் முன்கூட்டியே தீர்மானித்து எடுத்துக் கொண்டது போல் உள்ளது. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கவேண்டும். அந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார்.

ஆனால் இந்த வழக்கில் நடைமுறை அனைத்தும் வழக்கமான முறையில் இல்லை. தலைமை நீதிபதியின் பார்வைக்காக மட்டும் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது
அதனால் இந்த வழக்கை நீங்கள் விசாரிக்க கூடாது” என்று காரசாரமாக வாதிட்டனர்.
இதையடுத்து, இந்த வழக்கை நானே விசாரிப்பதா? அல்லது வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதா? என்பதுபற்றி வரும் 14-ம் தேதி முடிவு செய்யப்படும் என்று கூறி வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்தார்.

இந்த நிலையில்தான் அமைச்சர் ஐ பெரியசாமியின் விடுதலையை எதிர்த்த வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அதே நீதிபதி வெளியிட்ட அறிவிப்பு திமுகவுக்கு இன்னொரு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சராக இருந்த ஐ பெரியசாமி வீடு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக 2012ம் ஆண்டு அதிமுக அரசு தொடர்ந்த வழக்கில் இந்த ஆண்டு மார்ச் மாதம்
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒவ்வொரு அமைச்சரும் விடுவிக்கப்பட்ட வழக்குகளில் மீண்டும் சிக்கிக் கொள்வது திமுக தலைமைக்கு தீராத தலைவலியை கொடுத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

இந்த இடியாப்ப சிக்கல்களுக்கு இடையே அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று கடந்த இரண்டாம் தேதி எடுத்த சபதத்தில் இன்று வரை அவர் உறுதியாக இருப்பதால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 26 எதிர்க்கட்சிகள் கூட்டணியிலிருந்து கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களே இப்படி உதயநிதி பேசியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை கூறும் நிலையும் ஏற்பட்டு விட்டது.

இது 2024 தேர்தலில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ராஜஸ்தான், ஜார்க்கண்ட், அரியானா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனால்தான் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின்
எந்த மதத்தையும் புண்படுத்தும் விதத்தில் அமைச்சர் உதய நிதி பேசவில்லை. பிரதமர் மோடி முழு விவரமும் அறியாமல் பேசி வருகிறார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஆனால் பாஜக தலைவர்களோ சனாதன தர்மத்தை இந்து மதம் மட்டுமே பேசுகிறது. அதனால் முதலமைச்சர் ஸ்டாலின் இதில் மற்ற மதங்களை ஏன் பேச வேண்டும் அதற்கு அவசியமே இல்லையே?… தனது மகன் செய்த தவறை மறைப்பதற்காக அவர் இப்படி முட்டுக் கொடுத்து பேசுகிறார்” என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.

திமுகவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி குறித்து அரசியல் விமர்சகர்களின் பார்வை இதுதான்.

“வழக்கமாக திமுகவை ஆதரித்து பேசும் சோனியா, ராகுல், பிரியங்கா மூவரும் சனாதன ஒழிப்பு விவகாரத்தில் அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவாகவோ, முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்பு கொண்டோ இதுவரை எதுவும் பேசவில்லை. ஏனென்றால் தமிழகத்திலும் சனாதன தர்ம ஒழிப்பு விவகாரம் திமுக அரசுக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. அதனால் தான் முக்கிய தலைவர்கள் மூவரும் மூச்சுக் காட்டாமல் இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் கடந்த 3ம் தேதி பல்லடம் அருகே வீட்டின் முன்பு மது அருந்தியதை தட்டி கேட்ட பாஜக நிர்வாகி மோகன் ராஜ் உட்பட அவருடைய குடும்பத்தினர் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என அதிமுக, பாஜக உள்ளிட்ட பெரும்பாலான எதிர்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த சம்பவம் கொங்கு மண்டல மக்களை கொதிப்படைய வைத்திருப்பதாக முதலமைச்சருக்கு உளவுத்துறை ரிப்போர்ட் சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுவும் திமுக தலைமைக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கலாம்.

மேலும் வருகிற 30ம் தேதி சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை நடத்தி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நெருக்கடியான நிலையிலும் உள்ளது. இனியும் கூடுதல் கால அவகாசம் கேட்டால் உச்சநீதிமன்றமே சிறப்பு விசாரணை குழுவை அமைத்து செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் வாங்கிய வழக்கை தன் கையில் எடுத்துக் கொண்டு விடும் என்ற பயமும் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

இப்படி நாலா பக்கமும் திமுக அரசுக்கு நாளுக்கு நாள் நெருக்கடி முற்றி வருவதால் அது தொடர்பான விவகாரங்களுக்கு பதில் அளிக்கவே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேரம் போய் விடுகிறது. இதனால் சென்னை உயர்நீதிமன்ற அறிவுரையின்படி
செந்தில் பாலாஜியிடம் இருந்து அமைச்சர் பதவியை பறிப்பது பற்றி சிந்திப்பதற்கு அவருக்கு நேரம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

உயர்நீதிமன்றத்தின் இது தொடர்பான தீர்ப்பை எங்களது சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்கவேண்டும். தவிர செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாமா என்பதை முதலமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று நீதி மன்றம் கூறி உள்ளதே தவிர அதற்கான காலக்கெடு எதையும் வெளியிடவில்லை. அதனால் முதலில் தலை போகிற விஷயங்களை கவனிப்போம். மற்றவற்றை பிறகு பார்ப்போம். என்று நினைத்துக்கூட செந்தில் பாலாஜி விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்காமல் ஸ்டாலின் தள்ளி வைத்திருக்கலாம்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ பெரியசாமி, உதயநிதி ஆகியோரால் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள சோதனை மிகப்பெரியது. அதை முதலமைச்சர் ஸ்டாலின் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 334

0

0