‘அவமானப்படுத்துறீங்களா..? திமுக கூட நாங்க கூட்டணி இல்லயா..?’ ஆவேசமான பழனி நகர்மன்ற துணை தலைவர்!!

Author: Babu Lakshmanan
8 September 2023, 10:02 pm
Quick Share

பழனி நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமை தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காததால் அதிருப்தியடைந்த நகர்மன்ற துணைத் தலைவர் கந்தசாமி அதிகாரிகள் முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் வாகன போக்குவரத்து கூட்ட நெரிசலில் பல மணி நேரம் சிக்கி தவிப்பதை தவிர்க்க பக்தர்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான அனைத்து துறை அலுவலருக்கான கலந்தாய்வு கூட்டம் பழனி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையிலும், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி முன்னிலையிலும் அனைத்து துறை அதிகாரிகள் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பத்திரிகையாளர்களுக்கும் கூட்டம் நடைபெற்ற வளாகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கூட்டம் முடிந்து அதிகாரிகள் வெளியே வரும் பொழுது, பழனி நகராட்சி நகர்மன்ற துணைத் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளருமான கந்தசாமி, அதிகாரியுடன் திமுக எம்பி முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது ஏன் எனக்கு தகவல் சொல்ல வில்லை எனவும், ரகசிய கூட்டம் நடைபெறுகிறதா எனக் கேள்வி எழுப்பிய அவர், திமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் விலகி இருக்கிறதா..?, என்று காட்டமாக கேட்டார். தொடர்ந்து, முதல்வர் கையெழுத்து போட்டு தான் பதவிக்கு வந்துள்ளேன் என்றும், அவமானப் படுத்துகிறீர்களா..?? என பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக வைத்தார்.

நகர்மன்ற துணைத் தலைவரின் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகளும், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 196

0

0