அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு : தொகுதிகளின் விபரம் பிறகு அறிவிப்பு…!!

27 February 2021, 6:46 pm
ADMK - pmk - updatenews360
Quick Share

சென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்.,6ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், மார்ச் 12ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாமகவின் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்திருப்பது, வன்னிய சமுதாயத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு, அதிமுக – பாமக இடையிலான கூட்டணியும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அதிமுக கூட்டணிக்கு வன்னியர்கள் முழு ஆதரவளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக-பாமக பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. அதில், பாமக தரப்பில் 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாகவும், ஆனால், 24 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்ப ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியது.

இதைத் தொடர்ந்து, தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள எம்ஆர்சி பகுதியில் இருக்கும் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில், அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம், ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல, பாமக தரப்பில் அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அவர் பேசியதாவது :- வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாமக இணைந்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும், என அறிவித்தார்.

பின்னர், இரு கட்சி தலைவர்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை மாற்றிக் கொண்டனர்.

Views: - 7

0

0