இதுக்கு மேல முடியாது… உடனே ஆக்ஷனில் இறங்குங்க.. டெல்லியில் அதிமுக நேரடி புகார்.. திமுக ஷாக்..!!

Author: Babu Lakshmanan
21 April 2022, 4:37 pm
Quick Share

கவர்னரின் சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்து, திமுக அரசின் மீது அரசியல் சாசனத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான முருகவேல் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது ;- அண்மை காலமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெரிய அளவில் சீர்கெட்டு இருக்கிறது. இது சம்பந்தமான அனைத்து விவரங்களும் தேசிய புலனாய்வு முகமையின் மூலம் தங்களுக்கு தெரிய படுத்தப்பட்டிருக்கும். குறிப்பாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிராகவும், சிறுமிகளுக்கு எதிராகவும் பெருமளவு குற்றங்கள் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஏற்பட்டிருக்கிறது.

போதைப் பொருள் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களின் உடமைகளும், சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் சொல்லப்பட்டிருக்கிறதே ஒழிய எந்தவிதமான புள்ளிவிவரங்களும் காவல்துறை, ஆளும் அரசால் வெளியிடப்படவில்லை. இதுபோன்ற குற்றச் செயல் புரிபவர்களும், திமுக அரசும் கைகோர்த்து செயல்படுவதால் வெளிப்படைத் தன்மை இல்லாத நிலை நிலவுவதாக அறிகிறோம்.

மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக காரணமே இல்லாமல் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆளுநர் வாகனம் மீது தாக்குதல்..? சட்டப்பேரவையில் அதிமுக அமளி...! தோல்வி  அடைந்த தமிழக அரசு- இபிஎஸ் குற்றச்சாட்டு

குறிப்பாக நேற்று ஆளுநர் மயிலாடுதுறை சென்றிருந்த போது, சில சமூக விரோதிகள் ஒன்றுகூடி ஆளுநரின் பாதுகாப்புக்கு சென்ற வாகனங்களின் மீது கற்களையும், காலணிகளையும், கருப்பு கொடிகளையும் வீசி எறிந்து மிகப்பெரிய பதட்டத்தையும், மேதகு ஆளுநரின் உயிருக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளனர்.

நல்வாய்ப்பாக ஆளுநருக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் திரும்பியிருக்கிறார். ஆளுநர் மாநிலத்திற்குள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது மாநில காவல்துறை தான் பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்தும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஆளுநரின் மீதான இந்தத் தாக்குதல் இந்திய அரசியல் அமைப்பின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக பார்க்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க முடியாத ஒரு அரசாக தமிழக அரசு இருப்பதை இந்த நிகழ்வு புடம் போட்டு காட்டுகிறது.

ஆளுநரின் சுற்றுப்பயண விபரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒன்றாகத்தான் இருக்க முடியும், குறிப்பாக தமிழக காவல்துறைக்கு கட்டாயம் தெரிந்திருக்க கூடிய சுற்றுப்பயண விபரமாக இருக்கும். ஆனால், நடந்து முடிந்த நிகழ்வுகளை ஒட்டி பார்க்கிற போது இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடு சமூக விரோதிகளால் ஏற்படும் என்று தெரிந்தே, காவல்துறை அனுமதி அளித்ததா அல்லது உளவுத்துறையின் செயலற்ற தன்மையை இது பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்த விவகாரத்தில் உண்மை தன்மையை கொண்டுவர ஒரு விரிவான விசாரணை இந்த திமுக அரசின் மீது நடத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

எனவே, குடியரசுத் தலைவரும், பிரதமரும், உள்துறை அமைச்சரும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் இந்திய அரசியலமைப்பு வழங்கி இருக்கக்கூடிய வழிமுறைகளின் படி, திமுக அரசின் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆளுநர் பாதுகாப்பு விவகாரம் நேரடியாக டெல்லிக்கு சென்றுள்ளதால், ஆளும் திமுக அரசு, பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Views: - 600

0

0