அதிமுக – தேமுதிக கூட்டணி…? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திடீர் திருப்பம் : அதிர்ச்சியில் திமுக..!!!

Author: Babu Lakshmanan
1 February 2022, 5:56 pm

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.19ம் தேதி நடைபெற இருக்கிறது. 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், கூட்டணி மற்றும் இடப்பங்கீட்டை அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரளவுக்கு இறுதி செய்து விட்டன. இதையடுத்து, வேட்பாளர் பட்டியலும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது.

இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம் என பல்முனை போட்டி நிலவுகிறது. அனைத்து கட்சியினரும் பல்வேறு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இதுவரையில் 5 கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

மேலும், மாவட்ட வாரியாக அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேசி வருகின்றனர். ஒரு மாவட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டாலும், மற்றொரு மாவட்டத்தில் சிக்கல் நீடித்து வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் திடீர் கூட்டணியா..? என்பது போல அதிமுக மற்றும் தேமுதிக செயல்பாடு அமைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சியில் 42 பதவிகளுக்கும், அறந்தாங்கி நகராட்சியில் 27, பதவிகளுக்கும், பொன்னமராவதி, ஆலங்குடி, கறம்பக்குடி, அரிமளம், கீரமங்கலம், அன்னவாசல், இலுப்பூர் மற்றும் கீரனூர் ஆகிய 8 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளில் 120 பதவிகளுக்கும் என மொத்தம் 189 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அந்தப் பகுதியை சேர்ந்த தேமுதிக செயலாளர் கலந்து கொண்டது பிற கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுக – தேமுதிக கூட்டணியா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்களுக்கும் சில இடங்களை ஒதுக்க வேண்டும் என தேமுதிக நிர்வாகிகள் அதிமுக நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, தலைமையிடம் கேட்டு சொல்வதாக அதிமுக நிர்வாகிகள் பதில் அளித்ததால் தேமுதிக நிர்வாகிகள் அதிருப்தியுடன் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.

அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்து இருகட்சிகளின் தலைமையும் எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், தேமுதிக நிர்வாகிகள் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால், ஒருவேளை இரு கட்சிகளிடையே கூட்டணி அமைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்..

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!