திமுக அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை… CM ஸ்டாலின் ஆட்சியை லிஸ்ட் போட்டு விளாசிய இபிஎஸ்

Author: Babu Lakshmanan
8 May 2024, 11:02 am

விடியா திமுக அரசின்‌ மூன்றாண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில்‌ மக்களுக்கு எந்த நன்மையும்‌ செய்யாத, அளித்த வாக்குறுதிகளில்‌ மக்களுக்கு பலனளிக்கும்‌ எதையும்‌ நிறைவேற்றாத இந்த ஏமாற்று மாடல்‌ அரசின்‌ முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌, தான்‌ நடத்துவது சொல்லாட்சியல்ல, செயலாட்சி என்று கொக்கரித்திருக்கிறார்‌.

மேலும் படிக்க: இன்று சட்டென குறைந்த தங்கம் விலை … ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? குஷியில் நகை பிரியர்கள்!!

சுயமாக செயல்படாமல்‌, குடும்ப உறுப்பினர்களின்‌ கைப்பாவையாக மாறி செயல்படும்‌ திரு. ஸ்டாலின்‌, தன்னுடைய ஆட்சியை செயலாட்சி என்று தம்பட்டம்‌ அடித்துள்ளார்‌. கடந்த 36 மாதங்களில்‌ தமிழகத்தின்‌ பல பகுதிகளில்‌ சட்டம்‌-ஒழுங்கு சீர்குலைந்து, கொலை, கொள்ளை, பாலியல்‌ வன்கொடுமை, போதைப்‌ பொருட்களின்‌ கேந்திரமாக மாறியுள்ளது. போதைப்‌ பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதில்‌ ஆளும்‌ கட்சியின்‌ சில நிர்வாகிகளே ஈடுபட்டுள்ளது தமிழகத்தை தலை குனிய வைத்துள்ளது.

ஆட்சிக்கு வந்தவுடன்‌, விடியா திமுக அரசு மின்கட்டண உயர்வு, வீட்டுவரி மற்றும்‌ சொத்துவரி உயர்வு, குடிநீர்‌ கட்டண உயர்வு, குப்பை வரி, பால்‌ விலை உயர்வு போன்ற பல வரி உயர்வுகளை தமிழக மக்களுக்கு பரிசாக அளித்துள்ளது.
அரிசி, காய்கறி, வீட்டு உபயோக எண்ணெய்‌ என்று அத்தியாவசியப்‌ பொருட்களின்‌ விலை பல மடங்கு உயர்வு.
மணல்‌, ஜல்லி, சிமெண்ட்‌, இரும்பு கம்பிகள்‌ உள்ளிட்ட கட்டுமானப்‌ பொருட்களின்‌ விலை பல மடங்கு உயர்வு.

தமிழகத்தில்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ எப்போதெல்லாம்‌ ஆட்சியில்‌ இருக்கிறதோ அப்போதெல்லாம்‌ சட்டத்தின்‌ மாட்சிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால்‌, திமுக ஆளும்போதெல்லாம்‌ சட்டம்‌-ஒழுங்கு சீர்கேட்டால்‌ மக்கள்‌ பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்‌. தமிழகம்‌ முழுவதும்‌ கஞ்சா மற்றும்‌ போதைப்‌ பொருட்களை இளைஞர்கள்‌, மாணவர்கள்‌ என்று அனைத்துத்‌ தரப்பினரும்‌ உபயோகிப்பதால்‌ எழும்‌ சட்டம்‌-ஒழுங்கு பிரச்சனை.

கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின்‌ திருட்டு, தனியாக வசித்து வரும்‌ முதியவர்களை குறிவைத்து கொலை வெறித்‌ தாக்குதல்‌ நடத்தி கொள்ளையடித்தல்‌ என்று அதிகரித்து வரும்‌ குற்றச்‌ செயல்களால்‌ அனைத்துத்‌ தரப்பு மக்களும்‌ பாதிப்படைந்துள்ளனர்‌.
ஆளும்‌ கட்சியின்‌ நிர்வாகிகளால்‌, காவல்‌ துறை மற்றும்‌ அரசுத்‌ துறை அதிகாரிகள்‌ மிரட்டப்படுதல்‌; மணல்‌ கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அலுவலர்‌ கொலை செய்யப்படுதல்‌.

தேர்தலின்போது பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள்‌ மட்டுமின்றி, அரசு மற்றும்‌ போக்குவரத்துத்‌ துறை ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளும்‌ நிறைவேற்றப்படவில்லை. திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும்‌ தமிழகத்தில்‌ அதிகரிக்கும்‌ ஜாதி, இன துவேசங்கள்‌. வழக்கம்போல்‌ திமுக ஆட்சியில்‌ மின்வெட்டால்‌ அல்லலுறும்‌ மக்கள்‌.

3 ஆண்டுகளில்‌ 3.5 லட்சம்‌ கோடி ரூபாய்‌ கடன்‌ வாங்கி, மக்களை கடனானிகளாக ஆக்கியதுதான்‌ விடியா திமுக அரசின்‌ சாதனை. இவ்வாறு, 36 மாத கால விடியா திமுக ஆட்சியின்‌ வேதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்‌.

கடந்த 36 மாதங்களாக எந்த ஒரு புது திட்டங்களும்‌ இந்த ஆட்சியில்‌ செயல்படுத்தவில்லை. மாறாக, எங்கள்‌ ஆட்சியில்‌ துவக்கப்பட்ட, செயல்படுத்தப்பட்ட பணிகள்‌ இந்த ஆட்சியில்‌ ஸ்டிக்கர்‌ ஒட்டி திறந்ததுதான்‌ இந்த விடியா திமுக அரசின்‌ சாதனை. அதுமட்டுமல்ல, எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சியில்‌ அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வந்த பல மக்கள்‌ நலத்‌ திட்டங்கள்‌ தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன; பல திட்டங்கள்‌ மூடுவிழா செய்யப்பட்டன;
இதுதான்‌ இந்த விடியா திமுக அரசின்‌ 3 ஆண்டு கால சோதனைகள்‌.

இன்னும்‌ இரண்டு ஆண்டுகள்‌ இந்த விடியா திமுக ஆட்சி தொடர்ந்தால்‌, தமிழகம்‌ படுபாதாளத்திற்கு சென்றுவிடுமோ என்று மக்கள்‌ அஞ்சுகிறார்கள்‌. தற்போது தமிழகத்தில்‌ நடப்பது சொல்லாட்சியுமல்‌ செயலாட்சியுமல்ல – மாறாக விடியா திமுக ஆட்சி – செயலற்ற ஆட்சி, பயனற்ற ஆட்சி, மக்கள்‌ விரோத ஆட்சி என்பதை தமிழக மக்கள் விரைவில் நிரூபிப்பார்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!