வேட்புமனுவை தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி… போட்டியின்றி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பு..!!

Author: Babu Lakshmanan
18 March 2023, 11:43 am
Quick Share

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்ததை தொடர்ந்து பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருந்து வருகிறது. இது கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் வெளிப்பட்டது. அதோடு, அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் இந்த செயலை எதிர்த்து நீதிமன்றங்களில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வழக்கு போட்டும், அதில் எதிர்பார்த்தது நடக்கவில்லை. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நடத்திய பொதுக்கூட்டம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். 20ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் 21ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் திரும்ப பெறலாம்.

மார்ச் 26ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 27ம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும், என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர். 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய, அதனை 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிந்தனர். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், அவர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உளளது. எனவே, நாளைய தினமே அவர் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

Views: - 59

0

0

Leave a Reply