அண்ணாமலை பாஜக தலைவரா…? இல்ல தனிநபரா..? ஊழல் பட்டியல் விவகாரம் ; கேள்வி எழுப்பும் கேபி முனுசாமி…!!

Author: Babu Lakshmanan
15 April 2023, 4:20 pm
Quick Share

பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஊழல் பட்டியலை தனிப்பட்ட நபராக வெளியிட்டாரா? அல்லது பாஜகவின் தலைவராக வெளியிட்டாரா? என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக துணை பொது செயலாளர் கே பி முனுசாமி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர் மோர், தண்ணீர், போன்றவற்றை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேபி முனுசாமியிடம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் மற்றும் சொத்து பட்டியல் வெளியிடுவேன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என தெரிவித்திருப்பது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.

அதில் பதிலளித்த அவர், பாஜக தலைவர் அண்ணாமலை ஆட்சியில் இருக்கின்ற திமுகவின் நிர்வாகிகள், அமைச்சர்கள், மீது ஊழல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். அதிமுகவை பொறுத்தவரை ஒரு அரசியல் கட்சி தலைவராக, பாரதிய ஜனதா கட்சி தலைவராக, இருந்து இந்த ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டாரா? அல்லது தனிப்பட்ட முறையில் அண்ணாமலை என்கிற நபர் வெளியிட்டாரா…? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

அப்படி பாஜக சார்பில் வெளியிட்டு இருந்தால் குறைந்தபட்சம் அவர்கள் ஆட்சி செய்கின்ற மாநிலத்தை தவிர எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்ற மாநிலங்களுமான ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, மேற்கு வங்கம், போன்ற மாநிலங்களில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் இதுபோன்ற அங்குள்ள எதிர்கட்சி தலைவர்கள் மீது ஊழல் பட்டியலை வெளியிட இருக்கிறார்களா? என்பதை அறிய விரும்புகிறேன்.

அண்ணாமலை தனிப்பட்ட முறையில் இந்த ஊழல் பட்டியலை வெளியிட்டு இருந்தால், அதற்கு ஏற்றவாறு அதிமுகவின் பதில் இருக்கும். அல்லது பாஜக தலைவர் என்கிற முறையில் வெளியிட்டிருந்தால் அதற்கு ஏற்றவாறு எங்களின் பதில் இருக்கும், எனக் கூறினார்.

தொடர்ந்து, ஆணவ கொலை தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- வாழ்கின்ற சமூகம், காலத்திற்கு ஏற்றவாறு பெற்ற பிள்ளைகளின் உணர்வுகளை மதித்து செயல்பட்டால் இது போன்ற ஆணவப் கொலைகள் தடுக்கப்படலாம். பெற்றோர்கள், உறவினர்கள், சமூகத்தின் நிலைப்பாட்டை உணர்ந்து ஒரு காலகட்டத்தில் சமூகம் சாதி என்கிற வகையில் ஒதுங்கி இருந்த சமூகம் திருமணம் என்கிற உறவில் பலப்பட்டு வருகிறது. எல்லா சமூகமும் வலுப்பெற்று வரும் நிலையில் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆணவக் கொலைகளை தவிர்க்க வேண்டும், எனக் கூறினார்.

அண்ணாமலை வாட்ச் விவகாரம் ஒரு செய்தி இல்லை, இதற்கெல்லாம் முக்கியத்துவம் தேவையில்லை என்று கூறிய கேபி முனுசாமி, ஊழலை எதிர்த்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார்.

அதாவது, அண்ணாமலை அவர்கள் ஏதோ இவர் மட்டும்தான் நாட்டுக்காக பிறந்தது போல பேசிக் கொண்டிருக்கிறார். நாட்டுக்காக உழைத்தவர்கள், தியாகம் செய்தவர்கள், பல ஆயிரம், பல லட்சம் பேர் இருக்கிறார்கள். உழைத்துக் கொண்டு தியாகம் செய்து கொண்டு இருப்பவர்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள். அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு மக்களுக்காக சேவை செய்பவர்கள் லட்சக்கணக்கானோர் உள்ளனர். அண்ணாமலை சொல்கிறார் அது அவருடைய கருத்து. அதை நான் எப்படி விமர்சிப்பது.

ஊழல் என்கிற சொல்லால் அரசியல் தலைவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும். பத்திரிகையாளர்களின் இது போன்ற கேள்விகளால் தவறு செய்பவர்களுக்கு கூட செய்யக்கூடாது என்கிற எண்ணம் வரும். பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் போது அரசியல்வாதிகள் தவறு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் தவறு செய்யாமல் வாழ வேண்டும் என்கிற எண்ணம் அரசியல்வாதிகளுக்கு வருவதற்கு வாய்ப்பாக இருக்கும், என தெரிவித்தார்.

பேட்டியின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார் தமிழ்ச்செல்வன் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Views: - 260

0

0