புதுச்சேரியில் கூட வந்தாச்சு… நீங்க 2 முறை பட்ஜெட் தாக்கல் பண்ணியும் அறிவிக்கல : திமுகவுக்கு கேள்வி எழுப்பிய அன்புமணி..!!

Author: Babu Lakshmanan
22 August 2022, 8:46 pm
Quick Share

மகளிருக்கான ரூ.1,000 திட்டம் புதுச்சேரியில் கூட அறிவிப்பாக வெளியிடப்பட்டு விட்டதாகவும், ஆனால், திமுக இன்னும் அறிவிக்கவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

21 வயதுக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் உதவித்தொகை என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்வது குறையும். அந்த வகையில், இது மகளிர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும்.

தமிழகத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. புதிய அரசு பதவியேற்று இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது மகளிர் உரிமைக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். எனவே, இந்த விவகாரத்தில் இனியும் தாமதம் செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 159

0

0