புதுச்சேரியில் மகளிருக்கு மாதம் ரூ.1000 அறிவிச்சிட்டாங்க… தமிழகத்தில் எப்போ…? ஏங்கும் குடும்பத்தலைவிகள்..!

Author: Babu Lakshmanan
22 August 2022, 6:46 pm
Quick Share

மகளிருக்கு ரூ.1,000

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது குடும்பத்தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்பதுதான்.

இது தேசிய அளவில் பாராட்டைப் பெறும் ஒரு அறிவிப்பாக பொது மக்களாலும், அரசியல் கட்சிகளாலும் பார்க்கப்படுகிறது.

இதற்கான காரணத்தை சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தபோது என்.ஆர். காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுவது பற்றி எந்தவொரு வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை.

அப்படி இருந்தும் கூட முதலமைச்சர் ரங்கசாமி புதுவை மாநில ஏழை பெண்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதத்தில் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

கடந்த மார்ச் மாதம் நடந்த புதுவை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் 2022 – 2023-ம் நிதி ஆண்டிற்கான 10,696 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தபோது முதலமைச்சர் ரங்கசாமி அருமையான இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

குறிப்பாக புதுவையில் 21 வயதுக்கு மேல் 57 வயதுக்குள் இருக்கும், அரசின் எந்த வித உதவித் தொகையும் பெறாத, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு, மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை, 11 மற்றும்12 வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி, மற்றும் சட்டப் பேரவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடி ரூபாய் வழங்கப்படும் என அதிரடி காட்டினார்.

புதுச்சேரி மாநிலத்தின் உத்தேச மக்கள் தொகை 12 லட்சம். இவர்களில் சரிபாதி பேர் பெண்கள் என்று வைத்துக் கொண்டால் 6 லட்சம் என்றாகிறது. 21 வயதிற்கு உட்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை தவிர்த்து வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் குடும்பத் தலைவிகள் மட்டும் 25 சதவீதம் பேர் என்று கணக்கில் எடுத்து கொண்டால் சுமார் ஒரு
லட்சம் பெண்களுக்கு இந்தப் பணப்பயன் மாதம்தோறும் கிடைக்க வாய்ப்புள்ளது.

திமுக

தமிழகத்தின் பக்கத்து மாநிலமான புதுச்சேரி வறுமையில் வாடும் குடும்பத் தலைவிகளுக்கு, ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்திருப்பது தமிழக குடும்பத்தலைவி களிடையே, நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்குவோம், கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் அளிக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் 15 மாதங்களாகியும் இதுதொடர்பாக ஸ்டாலின் அரசு தமிழக சட்டப்பேரவையில் முறைப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Stalin Warn - Updatenews360

இதற்கு பதில் அளிக்கவேண்டிய நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜனோ இது பற்றி
வெளிப்படையாக பேசவோ, விவாதிக்கவோ மறுக்கிறார். அதேநேரம் சில அமைச்சர்கள் மட்டும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள தகுதியான குடும்பத் தலைவிகள் பற்றி கணக்கெடுத்து வருகிறோம். அது முடிந்த பின்னர் முதலமைச்சர் இதில் சாதகமான முடிவெடுப்பார் என்று 6 மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்டனர். ஆனால் அப்படிப்பட்ட கணக்கெடுப்பு எதுவும் இதுவரை நடத்தப்பட்டதாக தெரியவில்லை. மாறாக, பல மாதங்களாக நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

தமிழக பெண்கள் எதிர்பார்ப்பு

அதேநேரம் தேர்தலில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று வாக்குறுதி அளிக்காத என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு இதை சட்டப்பேரவையில் அறிவித்திருப்பதன் மூலம் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவரிடமும் திமுக அரசு எப்போது முதல் 1000 ரூபாய் வழங்குவார்கள், திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகிவிட்டதே, அந்த மாதங்களையும் கணக்கிட்டு 15 ஆயிரம் ரூபாயாக கொடுப்பார்களா? இந்தத் திட்டத்தை எப்போது நடைமுறைக்கு கொண்டு வந்தாலும் பழைய நிலுவை தொகையையும் சேர்த்தே வழங்கவேண்டும் என்பது போன்ற சிந்தனைகளும் அவர்களிடம் எழத் தொடங்கிவிட்டது என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

திமுகவுக்கு நெருக்கடி

“திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அரசு சாதாரண டவுன் பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம், பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு என்று கூறி இருந்ததை ஆட்சிப் பொறுப்பேற்றதுமே நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டது. ஆனாலும் சாதாரண டவுன் பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுவதில்லை, கிராமப்புறங்களில் இரவு 8 மணியுடன் இச்சேவை நிறுத்தப்பட்டு விடுகிறது என்ற குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பதாக கூறினாலும், அண்மையில் வெளியான ஒரு செய்தியில் 500 மில்லி ஆவின் பால் பாக்கெட்டில் சுமார் 70 மில்லி அளவு குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுவும் குடும்பத் தலைவிகளின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டுள்ளது.

இப்படி தங்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பாதிப்பு ஏற்படுவதாக குடும்பத் தலைவிகள் கருதுவதால்தான் மாதம்தோறும் 1000 ரூபாய், சிலிண்டர் மானியம் 100 ரூபாய் போன்ற வாக்குறுதிகளை திமுக அரசு எப்போது நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் அவர்களிடம் தற்போது தீவிரமாக எழுந்துள்ளது.

மேலும் நலிந்த மற்றும் வறிய நிலையில் உள்ள குடும்பத் தலைவிகளின் கணவன்மார்கள் தாங்கள் அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்து குடும்பத்தையே சீரழித்து விடுகிறார்கள். இதுபோல அன்றாடம் பணத்துக்கு அவதிப்படும் பெண்களுக்கு, மாதம்தோறும் 1000 ரூபாய் என்பது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். அதேபோல்தான் கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் என்பதும்.

எனவே புதுச்சேரி முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தது போல் எப்போது முதல் தமிழகத்திலும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதை திமுக அரசு சட்டப்பேரவையில் வெளியிட வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலினே இதை அறிவிப்பதுதான் சரியான தீர்வாகவும் இருக்கும். ஏனென்றால் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, தான் தேர்தலில் வாக்குறுதி அளிக்காத ஒன்றை அறிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்திருப்பதால் அதை நிறைவேற்றியே ஆக வேண்டிய கட்டாயத்திற்கும் அவர் தள்ளப்பட்டுள்ளார்.

தமிழகம் மிகப் பெரிய மாநிலம். புதுச்சேரியோ மிக மிகச் சின்னது என்று கூறாமல் திமுக அரசு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று அந்த சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

எப்படியோ வறிய நிலையில் உள்ள தமிழக குடும்பத் தலைவிகளுக்கு நல்லது நடந்தால் சரிதான்!

Views: - 2746

0

0