மேலும் ஒரு அதிமுக நிர்வாகி கடத்தல்… மர்மநபர்கள் தாக்கியதால் படுகாயம் : சாலை மறியலால் பரபரப்பு.. கரூரில் களேபரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 December 2022, 8:30 am
Karur Politics - Updatenews360
Quick Share

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 19 – ம் தேதி கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில், கரூர் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவரும், மாவட்ட கவுன்சிலருமான திருவிக நேற்று முந்தினம் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டார்.

கரூர் தனியார் மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னை எட்டு பேர் சேர்ந்து கடத்தினர். அவர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் பெயரை தெரிவித்தனர். அதோடு, அவர்களில் இருவர் பைகளில் ஸ்டாலின் படம் இருந்தது” என்று பேட்டியளித்தார்.

இந்த கடத்தல் சம்பவம் குறித்து, திண்டுக்கல் மாவட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில், கரூர் அடுத்த வேலுச்சாமிபுரம் பகுதியில், மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளரான சிவராஜ் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர் சிலரால் காரில் கடத்தப்பட்டார்.

இதனை தொடர்ந்து, கரூர் – கோவை நெடுஞ்சாலையில் உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் அரசு பேருந்துகளை முற்றுகையிட்டு, அ.தி.மு.கவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கடத்தப்பட்ட அ.தி.மு.க நிர்வாகி சிவராஜ் ஒரு மணி நேரத்திற்குள் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, சுக்காலியூர் காட்டுப்பகுதியில் போலீஸார் மற்றும் அ.தி.மு.கவினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.
இதற்கிடையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.கவினருக்கு, அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அந்த இடமே பரபரப்புக்கு உள்ளானது.

அதனை தொடர்ந்து, அதிமுக நிர்வாகியை கடத்திய நபர்கள் மீது வழக்கு பதிய வேண்டுமென, அ.தி.மு.க கோரிக்கை விடுத்தனர். மேலும், ‘கடத்திய நபர்கள் மீது நாளை காலைக்குள் வழக்கு பதியவில்லை என்றால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்று அ.தி.மு.கவினர் எச்சரித்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக, கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், முகம், தலை உள்ளிட்டப் பகுதிகளில் தாக்குதலால் காயம்பட்ட சிவராஜ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த சிவராஜின் சகோதரி கவிதா, நேத்து கலெக்டர் ஆபிஸ்ல நடந்த தேர்தலையொட்டி, என் தம்பியை கடத்தியிருக்காங்க. அங்கேயே தி.மு.கவினர், ‘உன்னைய பார்த்துக்குறோம்டா’னு சொல்லியிருக்காங்க.

முகநூலில் பதிவு போடக்கூடாதுனு மிரட்டியிருக்காங்க. அதனால், இன்னைக்கு வேலுச்சாமிபுரம் பஸ்ஸ்டாப்புக்கிட்ட நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்து அவனை இடித்து தள்ளி, அவன் கழுத்துல பெரிய அரிவாளை வைத்து மிரட்டி, கடத்தியிருக்காங்க.

காரிலேயே வைத்து, அவனை அடித்திருக்காங்க. கலெக்டர் ஆபிஸ் பக்கத்தில பிரியாணி கடை வைத்திருக்கிற குமார்ங்கிறவர்தான், சிவராஜை கடத்தியிருக்கிறார்.

நேத்தும் குமார்தான் என் தம்பியை மிரட்டியிருக்கிறார். குமாரோட சேர்த்து ஆறு பேர் கொண்ட கும்பல்தான் என் தம்பியை கடத்தி, இப்படி கொடூரமாக தாக்கியிருக்கிறது.

மூஞ்சியிலெல்லாம் பயங்கர அடி. எலும்புல அடி. ஸ்கேன் பண்ண கொண்டுட்டு போயிருக்காங்க. உதட்டுலயும் நல்ல அடி. அவனை கடத்தியதும், எங்களுக்கு போன் பண்ணி, அவர்கள் அனைவரும் நக்கலாக சிரிச்சாங்க.

அரசியல் காரணமாகதான் சிவராஜை இப்படி கடத்தி தாக்கியிருக்காங்க. ஏற்கனவே, அவன்மேல பொய்கேஸ் போட்டாங்க. அந்த கேஸ்ல 20 நாள் உள்ளே இருந்துட்டு, இப்பதான் வந்தான். நேத்து ஒருத்தரை கடத்தியிருக்காங்க.

இப்போ, இன்னைக்கு என் தம்பியை கடத்தியிருக்காங்க என்றார். இந்த சம்பவங்களால் கரூர் மாவட்ட அரசியல் களேபரம் வெடித்திருக்கிறது.

Views: - 515

0

0